ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின்னர் அது தளர்த்தப்பட்டது. மேலும் இணைய சேவைகளும் செல்போன் சேவைகளும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.
இது தவிர அங்குள்ள அரசியல் தலைவர்களும், பிரிவினைவாத தலைவர்களும், முன்னாள் முதலமைச்சர்களான ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இதனிடையே தற்போது உமர் அப்துல்லாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் அவர் நீண்ட தாடியுடன் மருத்துவரின் பக்கத்தில் நிற்கிறார். தொடர்ந்து ஆறு மாதங்களுக்கும் மேலாக அடிப்படை உரிமைகளை இழந்து வீட்டுக் காவலில் இருக்கும் அவரது புகைப்படம் மூன்றாவது முறையாக வெளியாகியுள்ளது. இதற்கு முன் கடந்தாண்டு அக்டோபரிலும், இந்தாண்டு ஜனவரியிலும் உமரின் புகைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.