உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் (19) ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு உயர் சாதி ஆண்களால் கடந்த 14ஆம் தேதியன்று கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, உயிரிழந்தார். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்பினர் என நாடு முழுவதும் பல மக்கள் குரல் எழுப்பிவருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் பெண்ணுக்கே இன்னும் நீதி கிடைக்காத நிலையில், ஹத்ராஸில் மற்றொரு பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்துள்ளார். உபி அலிஹாராவைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி, கடந்த ஜனவரி மாதம் தனது தாயை இழந்ததால், தனது சகோதரியுடன் உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, கடந்த 15ஆம் தேதி அந்தச் சிறுமியை, அவரது உறவினர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால், பலத்த காயமடைந்த அந்தச் சிறுமி, அலுஹாரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்நிலையில் நேற்று (அக். 5) சிகிச்சைப் பலனளிக்காததால் சிறுமி உயிரிழந்தார். இதனையடுத்து சிறுமிக்கு நீதிக் கேட்டு உறவினர்கள், சிறுமியின் உடலுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கூறுகையில், “எங்கள் கோரிக்கையை காவல் துறையினர் காதுக் கொடுத்து கேட்கவில்லை. குற்றவாளியைக் கைது செய்யாமல், குற்றவாளியின் மனநலம் பாதித்த சகோதரனை கைதுசெய்துள்ளனர். அதனால், விரைவாக குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும்” என்றார்.
இது குறித்து பேசிய, ஹத்ராஸ் காவல் கண்காணிப்பாளர், “இந்தச் சம்பவம் குறித்து இஹாஸ் காவல் நிலையத்தில் குற்றவாளி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இது குறித்து தீவிர விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க...'ஜஸ்டிஸ் ஃபார் ஹத்ராஸ்' வலைதளத்தின் மீது வன்முறையைத் தூண்டியதாக வழக்குப்பதிவு !