அமராவதி: ஆந்திரப் பிரதேச போக்குவரத்து மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சரான பெர்னி வெங்கட்ராமையா எனப்படும் நானி தனது வீட்டிற்கு அருகில் தான் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, விரைந்து வந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், நானி அவரது வீட்டிற்கு அருகில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் பணிபுரியும் கொத்தனார் ஒருவரால் பூச்சு வேலைக்கு பயன்படுத்தப்படும் கருவியால் தாக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும், அவர் பெயர் நாகேஸ்வர ராவ் என்பதும், முன்விரோதம் காரணமாகவும், தாக்குதல் நடந்தபோது அவர் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
பின்னர், தாக்குதல் நடத்திய நாகேஸ்வர ராவ் மீது கொலை முயற்சி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், "நாகேஸ்வர ராவின் தாயார் சமீபத்தில் இறந்ததையடுத்து அவரது இறுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிலர் எனது வீட்டிற்கு அருகில் தங்கியிருந்தனர். பின்னர் நான் வீட்டிலிருந்து வெளியேறுவதைக் கண்ட நாகேஸ்வர ராவ் திடீரென எனது காலைத் தொட்டு கும்பிட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் வேலை செய்ய வைத்திருந்த பொருள் என் அடி வயிற்றில் தாக்கியது.
இதையடுத்து எனது பாதுகாவலர்கள் அவரை தடுத்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் எனக்கு எவ்வித காயங்களும் படவில்லை" என்றார்.
இதையும் படிங்க: ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கோவிட்-19 தாக்கி உயிரிழப்பு!