இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு இடங்கள் முடக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்றவை அனைத்தும் முடக்கப்பட்டதால், பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
உலகளவில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்த நாடுகளுக்கு பல்வேறு தொழிலதிபர்கள் உதவிக்கரம் நீட்டிவருகின்றனர். வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தவும், சிகிச்சைக்காவும், வாழ்வாதரம் இழந்து தவிப்பவர்களுக்கு உதவும் பொருட்டும் முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றைத் தானமாக வழங்கி வருகின்றனர். சீனாவின் ஜாக் மா, அமெரிக்காவின் பில் கேட்ஸ் உள்ளிட்ட தொழிலதிபர்கள் தொடங்கி பலர் இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், இந்தியாவில் எந்த பெரு நிறுவன முதலாளிகளும் உதவ முன்வரவில்லை என கடந்த இரு நாள்களாக விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், மகேந்திர நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தற்போது முதல் ஆளாக முன்வந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”கரோனா பாதிப்பு எண்ணிக்கை மூன்றாவது கட்டத்தைத் தற்போது அடைந்துள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகும் அபாயம் எழுந்துள்ளது. தற்போதைய ஊரடங்கு பாதிப்பைக் குறைக்கும் என்றாலும், தற்காலிக மருத்துவமனை, வென்டிலேட்டர்களை நாம் விரைந்து தயாரிக்க வேண்டும்.
இதையடுத்து, இந்த அசாதாரண சூழலைச் சமாளிக்கும் விதமாக வென்டிலேட்டர் தயாரிப்பில் ஈடுபட மகேந்திரா நிறுவனம் களமிறங்கியுள்ளது. மேலும் மகேந்திர நிறுவனத்தின் தங்கும் விடுதிகளைத் தற்காலிக மருத்துவ மையமாக மாற்ற தயாராகவுள்ளோம். மேலும், எங்கள் நிறுவனம் சார்பில் கரோனா பாதிப்பு நிதியுதவி திரட்டப்படவுள்ளது. நான் எனது சம்பளத் தொகையை இந்த நிதியுதவிக்கு இந்த மாதத்திலும் வரும் மாதங்களிலும் வழங்கவுள்ளேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தன்னைப் போன்று மற்ற தொழிலதிபர்களும் இந்தக் கடினமான சூழலில் உதவ முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா: 4,800 உயிர் பலிக்கு இத்தாலியின் இந்தப் பொறுப்பற்ற செயல்தான் காரணமா?