ராஜஸ்தான் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசாங்கம் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஆம்புலன்ஸ் ஊழியர் சங்கத்தினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில், ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இன்று (அக்.21) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து ஆம்புலன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வீரேந்திர சிங் சேகாவத் கூறுகையில், "முன்னதாக, 2019ஆம் ஆண்டு டிசம்பரில், ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சம்பளத்தை 20 சதவிகிதம் உயர்த்துமாறு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இன்று வரை அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஆறு மாதங்களாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தொடர்ந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள், ஆனால் இன்றுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. மேலும், கரோனா காலத்தில் அயராது உழைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்காக முகக்கவசங்களும், சானிடைசர்களும் வழங்கப்படவில்லை" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, 2019ஆம் ஆண்டு நவம்பரில், ஆம்புலன்ஸ் தொழிற்சங்கத்தின் ஊழியர்கள் வேலை இழப்புக்கு பயந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால், அப்போது மாநில அரசின் உத்தரவாதத்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.