இணைய பணப்பரிமாற்ற சேவைகளை வழங்குவதில் பல்வேறு நிறுவனங்களும் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில், அமேசான் நிறுவனமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக நடந்து கொண்டுள்ளது. கடந்து 2007-ம் ஆண்டு தொடங்கிய தனது 'அமேசான் பே' சேவையில் இந்நிறுவனம் தற்போது யுபிஐ வசதி கொண்டு இயங்கும்படி அப்டேட் செய்துள்ளது.
ஆக்ஸிஸ் வங்கியுடன் சேர்ந்து 'அமேசான் பே யுபிஐ' சேவையை அமேசன் இந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இனி ஒவ்வொரு முறையும் ஓடிபிக்காக (ஒருமுறை கடவுச்சொல்) காத்திருக்காமல், யுபிஐ கடவுச்சொல்லை (UPI Password) பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.
ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும் போன்களுக்கு மட்டும் தற்போது இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் ஐஓஎஸ் போன்களிலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பயன்படுத்தி அமேசான் தளத்தில் பொருட்கள் வாங்குவது மட்டும் இல்லாமல், போன் ரீ-சார்ஜ் செய்வது, பில் கட்டுவது என பல்வேறு விஷயங்களை செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு.