நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர்களாக உள்ள 51 எம்பி.க்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) நிறைவடைகிறது. இதற்கிடையில் நான்கு எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதனால் மாநிலங்களவைக்கு காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 55 ஆக உள்ளது. இந்த இடங்களுக்கு வருகிற 26ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. மாநில வாரியாக பார்க்கும்போது, மகாராஷ்டிராவில் ஏழு இடங்களும், தமிழகத்தில் ஆறு இடங்களும் உள்ளன.
மற்ற மாநிலங்கள் முறையே பிகார் மற்றும் மேற்கு வங்கத்தில் ஐந்து, ஒடிசா, ஆந்திரா மற்றும் குஜராத்தில் நான்கு இடங்களும் உள்ளன. ராஜஸ்தானில் மூன்று இடங்களும், தெலுங்கானா, சத்தீஷ்கர், ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு இடங்களும் உள்ளன.
இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் மேகாலயாவில் தலா ஒரு இடங்களும் காலியாக உள்ளது. இதற்கான வேட்புமனு கடந்த ஆறாம் தேதி தொடங்கியது. இந்த வேட்புமனுக்களை பெறுவதற்காக, தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் கடந்த 9ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அன்றைய தினம் அ.தி.மு.க. வேட்பாளர்களாக கே.பி.முனுசாமி, மு.தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இவர்கள் மூன்று பேரும் கடந்த 12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும், சுயேச்சைகள் 3 பேரும் மனுத்தாக்கல் செய்தனர். போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால் சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று (மார்ச்18) திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ மற்றும் அதிமுக வேட்பாளர்கள் கே.பி.முனுசாமி, மு.தம்பிதுரை, ஜி.கே. வாசன் ஆகியோர் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலங்களவை தேர்தலில் ஒரு வேட்பாளரை 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிய வேண்டும் என்பது சட்டவிதியாகும் என்பது நினைவுகூரத்தக்கது.