பொருளாதார மந்தநிலை காரணமாக அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டிருந்த தருணத்தில், கரோனா என்ற இடி தாக்கியதில் மக்களின் வாழ்வாதரம் மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரமும் முடங்கிப்போனது. அனைத்து தொழில்கள், சேவைகள் துறையும் முடங்கியதையடுத்து, அரசின் வரி வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது. கோவிட் வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் மத்திய அரசு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசுகளுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.
ஆனால், மாநில அரசின் கோரிக்கைகள் தங்களுக்கு கேட்கவில்லை என்பது போல மத்திய அரசு இருந்து விட்டது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மதுக்கடைகளைத் திறக்கலாம் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஒன்றரை மாதம் வரை மதுக்கடைகள் மூடியிருந்ததால் மாநில அரசுக்கு வருவாய் இழப்பு என்பது, ரூ.30,000 ஆயிரம் கோடி ஆகும்.
மத்திய அரசுடன் ஒப்பிடும்போது மாநிலங்கள் ஒன்றரை மடங்கு அதிக நிதிச்சுமையை தாங்குகின்றன. மது விற்பதில் இருந்து கிடைக்கும் வருவாய் மாநில பட்ஜெட்டின் நிதி ஆதாரத்தில் கடந்த பல ஆண்டுகளாக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு நிதி ஆதரவும் இல்லாத பட்சத்தில், மதுக்கடைகளைத் திறக்கும் வாய்ப்பை மாநிலங்கள் ஆர்வத்துடன் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. சில பற்றாக்குறையை ஈடுகட்டும் வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில், டெல்லி 70 சதவிகிதம், ஆந்திரா 75 சதவிகிதம், தெலங்கானா 16 சதவிகிதம், மேற்கு வங்கம் 30 சதவிகிதம் வரையிலும் மதுவின் விலையை அதிகரித்திருக்கின்றன.
பல கி.மீ தூரம் நீண்ட வரிசையில் நின்று மதுவை வாங்கிச் சென்ற குடிமகன்களால் மது விற்பனை சாதனை படைத்துள்ளது. இந்த அதிக தேவையின் காரணமாக மது ஆலைகள் தங்கள் ஆலைகளை மேலும் கூடுதல் ஷிப்ட்களில் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. 40 நாட்கள் ஊரடங்கு காலகட்டத்தின் விளைவாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சாதகமான விளைவுகள் வீணாவது குறித்த பொதுமக்களின் கேள்விகளுக்கு யார் பதில் அளிக்கப்போகிறார்கள்?
கோவிட் என்ற பெருந்தொற்றுக்கு இதுவரை எந்த மருந்தும் இல்லை என்பதுதான் கடினமான உண்மை. மது போதைக்கு அடிமையான நாட்டின் 16 கோடி மக்கள், ஒரு பெருந்தொற்றுக்கு நிகரானவர்கள்தான். மது போதை பெருந்தொற்றானது சொல்லவியலா துயரங்களை அவர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.
உலக சுகாதார நிறுவனம் 2018ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் ஆண்டுதோறும் மதுவின் விளைவால் 2,60,000 பேர் அகால மரணம் அடைகின்றனர் என்று தெரிய வந்துள்ளது. தினமும் சராசரியாக 712 பேர் மதுவின் கொடுமையால் இறக்கின்றனர். மது தினமும் 700 கோடி ரூபாயை அரசுக்குத் தருகிறது. மது பழக்கத்தின் காரணமாக 230 வகையான நோய்கள் தொற்றுகின்றன என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். மது எனும் பெருந்தொற்றால் பல குடும்பங்கள், குழந்தைகள் மகிழ்ச்சி மற்றும் அமைதியை இழந்து தவிக்கின்றனர் என்று சமூகவியலாளர்கள் கூறுகின்றனர்.
தேசம் முழுவதுக்குமான கலால் வருவாய் நீண்டகாலத்துக்கு முன்பு 2004-05ம் ஆண்டில் 28,000 கோடி ரூபாயாக இருந்தது. இது பத்து மடங்கு அதிகரித்திருக்கிறது. சமூகப் பேரழிவின் மூலம் பன்மடங்கு துயரம் பெருகியிருக்கிறது. எண்ணிலடங்கா குழந்தைகளை மது அனாதை இல்லங்களுக்கு அனுப்பி இருக்கிறது. இளம் வயதிலேயே பல ஆண்கள் அகால மரணம் அடைவதால், இளம் விதவைகள் உருவாகி இருக்கின்றனர். எந்த பணமும் இதற்கு ஆதரவாக இருக்க முடியாது. முழு ஊரடங்கின்போது இயற்கையின் ஐந்து கூறுகளும் தூய்மையடைந்திருக்கின்றன. லட்சக்கணக்கான குடும்பங்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன. எல்லா வழிகளிலும் மது விற்பனை நிறுத்தப்பட்டது.
ஊரடங்கின் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடந்த மதுவுக்கு அடிமையான பலர், தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வாழ்க்கை முறையை மேம்படுத்தினர். மதுக்கடைகள் திறந்ததன் காரணமாக மது பைத்தியமான பெருந்திரள் மக்கள் சமூக விதிமுறைகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு விட்டனர். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இணை நோயுற்றவர்கள் உட்பட நாட்பட்ட நோய்கள் கொண்டவர்களுக்கு கோவிட் எளிதாக தொற்றும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். மதுவை அனுமதிக்கும் முடிவு ஏன் எடுக்கப்பட்டது. இந்த சிக்கலான சூழலில் இது பெருந்தொற்றை மேலும் பரப்பும் வழியை மட்டுமே செய்யும். மது எனும் பிசாசுக்கு கதவை திறப்பது என்ற அரசின் முடிவால், அது கொரோனா பிசாசை விட மேலும் பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பது நிரூபிக்கப்படக் கூடும்.