கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. இச்சூழலில் மூன்றாம் கட்ட ஊரடங்கை சில தளர்வுகளுடன் மே 17ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
இதனிடையே குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதேபோல, பயணிகளுக்கான ரயில் சேவையும் படிபடியாக தொடங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி, டெல்லி, சென்னை உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரயில் மே 12ஆம் தேதி வரை இயக்கப்படும் எனவும், டிக்கெட்டை ஆன்லைனில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியானதை அடுத்து, ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமே திணறும் அளவுக்கு பயணிகள் புக்கிங் செய்தனர்.
இச்சூழலில், வெளி மாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு வருபவர்கள், கோழிகோடு, எர்ணாகுளம், திருவனந்தபுரம் ஆகிய மூன்று ரயில் நிலையங்களில் இறங்குவதற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு செய்துவருகிறது. அதற்காக, விமான நிலையங்களில் செய்யப்பட்ட ஸ்கீரினிங் முறையை ரயில் நிலையங்களிலும் கையாளப் போவதாக அமைச்சர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.
அதன்படி ஸ்கீரினிங் செய்யப்பட்ட பின், அறிகுறி இருக்கும் பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும், நல்ல உடல்நிலையுடன் உள்ளவர்கள் அவர்களின் சொந்த மாவட்டத்திற்கு அரசுப் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
மத்திய அரசின் வழிக்காட்டுதலின்படி, சிறப்பு ரயில் மூலம் கேரளா வருபவர்கள் கட்டாயம் 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ரயில் பயணிப்பவர்கள் முகக்கவசம் அணிந்து தான் இருக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் இருக்கின்ற சானிடைசரை உபயோகிக்க வேண்டும் எனவும் கூறினார்.
தற்போதைய நிலவரப்படி, 519 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதில், 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; மற்றவர்கள் பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.