புதுச்சேரியில் முன்னதாக இருந்துவந்த வக்பு வாரியம் ஆயுள் காலம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதனால் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த மக்களுக்கான நல திட்டங்களைச் செயல்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
வக்பு வாரியத்தால் முஸ்லிம் பள்ளிவாசல்களில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாத சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. எனவே அரசு ஐந்து நபர்கள் உள்ளடக்கிய புதிய வக்பு வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களான வையாபுரி மணிகண்டன், அசானா ஆகியோர் சட்டப்பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்த தர்ணாவின்போது புதுச்சேரி அரசு விரைந்து வக்பு வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட பதாதைகளை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏந்திய வண்ணம் அமர்ந்திருந்தனர். பின்னர் அங்கிருந்து ஆளுநர் மாளிகை சென்று ஆளுநரிடம் இது தொடர்பாக மனு அளித்தனர்.