தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி. ரவீந்திரநாத் விரைவில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியமைத்து எட்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே மக்களவை உறுப்பினரான அதிமுகவின் ஓ.பி. ரவீந்திரநாத்தின் பெயர் புதிய அமைச்சரவையில் இடம்பெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரான ஒ.பி.ஆர் பிரதமர் மோடியின் மீது மிகுந்த பற்றுகொண்ட நபராக திகழ்கிறார். திராவிடக் கட்சிகளின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு, தனது அதிகாரப்பூர்வ லெட்டர் பேடில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்துள்ளார். பாஜக மேலிடத்தை மகிழ்விக்க பல்வேறு யுக்திகளை தொடர்ச்சியாக ஓ.பி.ஆர் கையாண்டுவருகிறார். சமீபத்தில் இந்து முன்னணி நடத்திய விழாவில் அவர் பங்கேற்றது திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை பெற்றது.
இருப்பினும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை ஓ.பி.ஆர் மாற்றிக்கொள்ளவில்லை. எனவே, வரப்போகும் மத்தியஅமைச்சரவை பட்டியலில் ஓ.பி.ஆரின் பெயர் முன்னணியில் உள்ளதாக பாஜக, அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'ஓ.பி.ஆருக்கு மத்திய இணையமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலாசரா அமைச்சர் பதவிகூட கிடைப்பதற்றான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகததால், பிரதமரின் இறுதி முடிவுக்காக காத்திருக்கிறோம்' என டெல்லியில் உள்ள அதிமுக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எந்தவொரு இறுதி முடிவும் பிரதமரின் கையிலேயே உள்ளது என பாஜக தரப்பு தெரிவிக்கிறது.
'தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் ஒரேயொரு மக்களவை உறுப்பினரை மட்டுமே பெற்றுள்ளது. அமைச்சரவையில் ஓ.பி.ஆரை சேர்ப்பது குறித்து எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. பிரதமரே இறுதி முடிவை எடுப்பார்' என பாஜக தென் மாநில மூத்தத் தலைவர் தெரித்துள்ளார்.
இதையும் படிங்க: புதுவித அரசியலில் ஈடுபட்டோம் - அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி உரை