குஜராத் மாநிலம் அகமதாபாத் நவரங்புராவில் உள்ள ஷ்ரே மருத்துவமனையில் இன்று அதிகாலை (ஆகஸ்ட் 6) எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் நான்காவது மாடியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், கரோனாவிற்காக சிகிச்சைப் பெற்றுவந்த எட்டு பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மொத்தம் 40 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்தனர். உயிர்தப்பிய நோயாளிகள் அருகிலுள்ள எஸ்விபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் முதல்கட்டமாக மருத்துவமனையின் அறக்காவலர் பாரத் மகந்த், வார்ட்டு பாய் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருவதாக, துணை காவல் ஆணையர் எல்.பி. ஜலா தெரிவித்தார்.
சம்பவம் குறித்து பேசிய இணை காவல் ஆணையர் ராஜேந்திர ஆசாரி, இந்த தீ விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். மற்ற நோயாளிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் விசாரணைக்காக தீயணைப்பு, தடயவியல் நிபுணர்களின் உதவியை நாடியுள்ளோம். இதில் மருத்துவமனையின் அறங்காவலர் ஒருவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்” என்றார்.
இது குறித்து குஜராத் முதலமைச்சர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அகமதாபாத்தில் உள்ள ஷ்ரே மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் குறித்த விசாரணைக்கு முதலமைச்சர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலர் (உள்துறை) சங்கீதா சிங் தலைமையில், விசாரணை நடைபெறும். இந்த விசாரணையை மூன்று நாள்களுக்கு முடிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க...குஜராத்: மருத்துவமனை தீ விபத்தில் எட்டு நோயாளிகள் உயிரிழப்பு!