காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் 2010ஆம் ஆண்டு, இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து முக்கிய பிரமுகர்கள் (விவிஐபி) பயன்பாட்டிற்காக 12 ஹெலிகாப்டர்கள் வாங்கிக்கொள்ள மூவாயிரத்து 600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் ரூ.362 கோடி ஊழல் நடந்ததாக குற்றஞ்சாட்டு எழுந்தது. இதில் முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி. தியாகி, வெளிநாட்டைச் சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் உள்பட 34 பேர் மீது குற்றஞ்சாட்டு கூறப்பட்டது.
இதில் வெளிநாட்டைச் சேர்ந்த சிலரும் உள்ளனர். இவர்களில் கிறிஸ்டியன் மைக்கேல் 2018ஆம் ஆண்டு துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார். அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), அமலாக்கத்துறை அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை எதிர்த்து கிறிஸ்டியன் மைக்கேல் சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சிபிஐ, அமலாக்கத்துறை அலுவலர்கள் எவ்வித வாரண்டும் இன்றி தம்மை திகார் சிறையில் விசாரித்தனர் என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி அரவிந்த் குமார், “கிறிஸ்டியன் மைக்கேல் மனு முழுமைப் பெறாமல் உள்ளது. மேலும் சிபிஐ, அமலாக்கத்துறை அலுவலர்கள் திகார் சிறைக்குச் சென்று விசாரணை நடத்தியதில் எந்த தவறும் இல்லை. ஆகவே மனுவை தள்ளுபடி செய்கிறேன்” என கூறினார்.
இதையும் படிங்க: 'எதிலும் உண்மை இல்லை, உண்மை இல்லாமலும் இல்லை’ - கே.எஸ்.அழகிரி