வேளாண்துறை சார்ந்த மூன்று முக்கிய சட்ட மசோதாக்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்ட மசோதா விவகாரம் தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இந்த சட்ட மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோன்மனி அகாலிதளமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் சார்பில் மத்திய அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் பாதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கூட்டணியில் நீடிக்கலாமா என பரிசீலனையில் சிரோன்மனி அகாலிதளம் ஈடுபட்டுவருகிறது.
இந்த சூழலில், புதிய மசோதாக்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். பிகாரில் நலத் திட்டப் பணிகளை காணொலி வாயிலாக திறந்துவைத்து உரையாற்றிய மோடி, புதிய மசோதாக்கள் வேளாண்துறையில் வரலாற்று சிறப்பு மிக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். விவசாயிகளுக்கு இது புதிய சுதந்திரத்தை இந்த மசோதா வழங்கும் எனத் தெரிவித்த நரேந்திர மோடி, விளை பொருள்களை லாபகரமாக விற்க பல்வேறு வாய்ப்புகள் இந்த திட்டதின் மூலம் விவசாயிகள் பெறுகிறார்கள் என்றார்.
எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் இடைத்தரகர்கள் பக்கம் நின்றுகொண்டு விவசாயிகளை ஏமாற்றும் விதமாக பொய் கருத்துகளை பரப்பிவருகின்றனர் என பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பிகார் மாநிலத்திற்கு ரூ.516 கோடி மெகா ரயில்வே திட்டம் - தொடங்கி வைத்த பிரதமர்