கரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு மத வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றை மூட மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நாட்டில் கரோனா வைரசின் பரவல் தீவிரமடைந்ததையடுத்து, ஊரடங்கு பல கட்டங்களாக தற்போதுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாட்டில், பெரும்பாலான மக்கள் வேலையிழந்து பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர். மத்திய, மாநில அரசுகளும் தங்களது வருவாயைப் பெருமளவு இழந்துள்ளன.
இதனால் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து, பொருளாதார மீட்டெடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தற்போது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில், தற்போது சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சுற்றுலாத் தலங்கள், வரலாற்று நினைவுச் சின்னங்களைத் திறக்க மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அத்துறையின் அமைச்சர் பிரகலாத் சிங் படேல், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தாஜ்மகால், செங்கோட்டை உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து நினைவுச் சின்னங்களும் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த முடிவு தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக சுற்றுலாத் தலங்களில் வியாபாரம் செய்வோர் தெரிவித்துள்ளனர்.