வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் சிக்கி 53 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, வன்முறை குறித்து இரண்டு மலையாள செய்தி நிறுவனங்கள் தவறாக ஒளிபரப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அந்தச் செய்தி நிறுவனங்களின் ஒளிபரப்புக்கு 48 மணி நேரம் தடைவிதித்துள்ளது. தேச விரோத கருத்துகளைத் தெரிவித்து இருபிரிவினரிடையே மோதல் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்னையை உருவாக்கும் வகையில் செய்தி நிறுவனம் இயங்கியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், ஒளிபரப்புத் துறையின் விதிகளை மீறியதாக இரு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுபோன்ற விதமீறல்களில் முதல்முறை ஈடுபட்டால் 30 நாள்கள் வரை ஒளிபரப்பு செய்ய தடைவிதிக்கப்படும்.
இரண்டாவது முறை ஈடுபட்டால் 90 நாள்களுக்குத் தடைவிதிக்கப்படும். மூன்றாவது முறை ஈடுபட்டால் நிறுவனத்தின் உரிமத்தை ரத்துசெய்வதற்கு அமைச்சகத்திற்கு உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: யெஸ் வங்கி நிதி நெருக்கடி: கலக்கத்தில் பூரி ஜெகன்நாதர் கோயில் நிர்வாகம்!