கர்நாடகா, மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான் காங்கிரசிலும் அரசியல் குழப்பம் தற்போது மையம் கொண்டுள்ளது. அம்மாநிலத்தின் துணை முதலமைச்சராகப் பதவிவகித்துவந்த இளம் தலைவர் சச்சின் பைலட் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இதையடுத்து அவர் துணை முதலமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மேலும், சச்சின் பைலட், அவரது ஆதரவாளர்கள் ஆகியோருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் காரணமாக சச்சின் பைலட் காங்கிரசிலிருந்து விலகும் சூழல் உருவாகியுள்ள நிலையில், அவரைத் தக்கவைக்க இறுதிக்கட்ட முயற்சிகளை ராகுல் காந்தி மேற்கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, முக்கிய இளம் தலைவரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ள நிலையில், மற்றொரு இளம் தலைவரையும் இழக்க ராகுல் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. சச்சின் பைலட்டின் செயல்பாடுகளை மன்னித்து, அவர் கட்சியில் தொடரும் வாய்ப்பை வழங்கவே ராகுல் விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல், சச்சின் பைலட்டுடன் சமாதன முயற்சியில் களமிறங்கியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ம.பி.யில் விவசாயிகளை தாக்கிய விவகாரம்: ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் இடமாற்றம்!