ஹரியானா மாநிலம், அம்பாலா விமானப்படை தளத்தில் இன்று (செப்.10) நடைபெற்ற ரஃபேல் இணைப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக பிரெஞ்சு பாதுகாப்புத் துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி கலந்து கொண்டார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரான்ஸ் அமைச்சர் புளோரன்ஸ் பார்லி ஆகியோரும் ரஃபேல் இணைப்பு விழாவில் பாரம்பரிய 'சர்வ தர்ம பூஜை'யில் கலந்து கொண்டனர்.
விமான படைப்பிரிவின் ஒரு பகுதியாக இருக்கும், ’கோல்டன் ஏரோஸ்’ பிரிவில் இணைக்கப்பட முதல் ஐந்து ரஃபேல் விமானங்கள், கடந்த ஜூலை 27ஆம் தேதி அன்று பிரான்சிலிருந்து அம்பாலாவின் விமானப்படை நிலையத்திற்கு வந்தடைந்தது.
இதற்கிடையில் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலுடன் பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “கரோனா நெருக்கடி காலக்கட்டத்திலும், இந்திய விமானப்படையில் சரியான நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ள முதல் ஐந்து ரஃபேல் ஜெட் விமானங்களைப் பார்ப்பது பெருமையாக உள்ளது.
மீதமுள்ள 31 ரஃபேல் ஜெட் விமானங்களையும் திட்டமிட்ட காலத்திற்குள் வழங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்” என்று கூறினார்.
முன்னதாக, அம்பாலா விமானத் தளத்தில் நடைபெற்ற கோலகலமான விழாவில், ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் முறையாக இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன.
கிழக்கு லடாக் பகுதியில் சீனாவுடன் பதட்டமான சூழல் நிலவிவரும் நிலையில், இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்கள் சேர்க்கப்பட்டது, நாட்டின் ராணுவ சக்தி திறனுக்கு ஒரு பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது.