2015 பாரிஸ் உடன்படிக்கையின்படி, 2030க்குள் இந்தியா 250-300 மில்லியன் டன் கரிய அமில வாயு மற்றும் பிற மாசுக்களின் உமிழ்வைத் தடுப்பதற்கான வனப் பரப்பையும் பசுமைப் பரப்பையும் அதிகரிக்க ஒப்புக்கொண்டிருந்தது. அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் மொத்த வனப்பரப்பு 0.56 சதவீத அளவுக்குதான் விரிவாகியிருக்கிறது. மத்திய அமைச்சர் ஜவடேகரோ, இந்த முன்னேற்றமானது பாரிஸ் உடன்படிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற உறுதியான நம்பிக்கையை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு புறம், இதே அறிக்கையானது பல மாநிலங்களில் காடுகள் அழிக்கப்பட்டுவரும் சூழலையும் எடுத்துக் காட்டியிருக்கிறது. நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீத அளவைக் காடுகளாக மாற்ற இலக்கு வைக்கப்பட்டு, பத்தாண்டுகளான போதும் அது இன்னும் எட்டப்படாமலேயே இருக்கிறது.
காடுகள் பாதுகாப்பு, பயிரிடலுக்கான தேசிய அளவிலான பரந்த திட்டமிடல் ஆகியவை ஆண்டுக்கணக்கில் இழுத்துக்கொண்டே இருக்கிறது. வனப்பரப்பை அதிகரிப்பது எனும் நடப்பு பொருண்மையுடன், குறிப்பிட்ட இலக்குகள், காடுகளின் எண்ணிக்கையை அளவிடுதல், கரிம உமிழ்வுகளின் அளவைக் குறைத்தல் ஆகியவை இப்போது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.
ஏமாற்றமளிக்கும் இலக்குவைத்தல்:
மனித குலத்துக்கு தூய்மையான காற்று, நீர், உணவை வழங்குவது, நிலத்தடி நீரைப் பாதுகாப்பது, கரிம உமிழ்வைக் குறைப்பது, பருவநிலை தப்புதல் ஆகியவற்றில் காடுகள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன. இத்துடன் காடு லட்சக்கணக்கான மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பையும் அளிக்கிறது.
1952இல் வெளியிடப்பட்ட முதல் தேசிய வனக் கொள்கையின்படி, நாட்டின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காடுகளாக இருக்கவேண்டும். ஆனாலும் 67 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் அந்த இலக்கு எட்டப்படாமலேயே உள்ளது. தேசிய வனக் கணக்கெடுப்பு நிறுவனமானது, இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை செயற்கைக்கோள் மூலமாக காடுகள் வளர்ப்பை அளவிட்டுவருகிறது. அதன் அறிக்கையின்படி, இந்தியாவின் இப்போதைய காடுகளின் மொத்தப்பரப்பு 7, 12, 249 சதுர கி.மீ. (21. 67 சதவீதம்). இது, 2017ஆம் ஆண்டில் 21.54 சதவீதமாக இருந்தது. அதாவது, வனப்பரப்பானது வெறும் 0.56 சதவீத அளவுக்குதான் அதிகரித்துள்ளது.
2011இல் வனப்பரப்பின் அளவு 6,92,027 சதுர கி.மீ. ஆக இருந்தது. இதுவே, முந்தைய பத்தாண்டுகளில் அதிகரித்த வனப்பரப்பு 20,222 சதுர கி.மீ., அதாவது 3 சதவீதம் ஆகும். பெருமளவு வளர்ச்சி இருப்பதாகக் காணப்பட்டாலும் காடுகள் வளர்ச்சியில் சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மிதமான அடர்த்தி கொண்ட காடுகள் 3,08,472 சதுர கி.மீ. நிலப்பரப்பில் விரிந்துள்ளன.
காபி, மூங்கில், தேயிலை போன்ற வணிக தோட்டப் பயிர்களைக் கொண்ட வெளிப்புறக் காடுகளின் பரப்போ 3 லட்சத்து 4,499 சதுர கி.மீ. (9.26 சதவீதம்) ஆகும். முந்தைய பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, மித அடர்த்திகொண்ட காடுகளின் பரப்பானது 3.8 சதவீத அளவு குறைந்தநிலையில், வர்த்தகக் காடுகளின் பரப்பானது 5.7 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. 2011இல் இந்த வகைக் காடுகளின் பரப்பானது 3,20,736 சதுர கி.மீ. ஆக இருந்தது. அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, இதே காடுகளின் பரப்பு 3 லட்சத்து 8,472 சதுர கி.மீ. என்னுமளவுக்கு குறைக்கப்பட்டுவிட்டது.
ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் 70 சதவீத மரங்களும் பசுமையாக இருந்தால் அது அடர்காடாக வகைப்படுத்தப்படும். கரிம உமிழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில் இவற்றின் பங்கு கூடுதலானது. இந்தியாவில், 99, 278 சதுர கி.மீ. பரப்பளவுக்குதான் (அதாவது 3 சதவீதம்) இக்காடுகள் பரவியுள்ளன. இவ்வகைக்காடுகளின் வளர்ச்சிவீதமானது 1.14 சதவீதம்தான். இதுவே, கடந்த அறிக்கையில், 14 சதவீதம் ஆகப் பதிவாகியிருந்தது. அப்போது, கர்நாடகத்தில் 1,025 சதுர கி.மீ., ஆந்திரத்தில் 990 சதுர கி.மீ., கேரளத்தில் 823 சதுர கி.மீ., ஜம்மு காஷ்மீரில் 371 சதுர கி.மீ., இமாச்சலப்பிரதேசத்தில் 344 சதுர கி.மீ. என அதில் பதிவாகியிருந்தது. இந்த ஐந்து மாநிலங்கள்தான் காடுகளைத் தொடர்ச்சியாக வளர்த்தெடுப்பதில் முன்னிலைவகிக்கும் முதல் ஐந்து மாநிலங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. பரப்பளவிலும் இந்த மாநிலங்களில் காடுகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. காடுகளின் வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சி குறித்த கணக்கெடுப்பு தொடர்பாக பல சந்தேகங்கள் நிலவுகின்றன.
காடுகளின் பசுமை, அடர்த்தியைக் கணக்கெடுக்கும்போது, காடுகளின் உடைமை, மரங்களின் வகையினங்கள், வனப்பகுதியின் மேலாண்மை ஆகியவற்றைக் கண்டுகொள்வதில்லை. செயற்கைக்கோள் படங்கள் குறித்து, சில ஆண்டுகளாக விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டுவருகிறது. அதாவது, செயற்கைக்கோள் படங்களில் ஒரு ஹெக்டேரில் 10 சதவீத மரங்களின் மேல்பகுதி பசுமையை வைத்தே அந்தப் பகுதி முழுக்க காடுகள் என்பதை எப்படி முடிவுசெய்வது என்பதே. வழக்கமாக, காபி, யூக்கலிப்டஸ், தென்னை, மா மற்றும் பிற வர்த்தக, தோட்டப்பயிர்களும் இதைப்போலவே மரங்களின் மேற்பரப்பில் பசுமையோடு இருக்கின்றன. எனவே இந்தக் கோணத்தில் பார்த்தால், செயற்கைக்கோள் படங்களில் உள்ள பசுமையை வைத்து காடுகளின் பரப்பையும் தன்மையையும் தீர்மானிப்பது சந்தேகத்துக்கு உரியதாகிறது.
காம்பா நிதி.. நம்பிக்கை!
வனப்பகுதி பாதுகாப்புச் சட்டம் 1980இன் படி, காட்டழிப்பை காட்டழிப்பு மற்றும் காடல்லாத பகுதிகளில் காடு வளர்ப்பு ஆகியவற்றை சோதித்தறிவதற்காக நாடு முழுவதும் ஒரு குறிப்பிட்ட செயல்முறையானது, ஒரு குறிப்பிட்ட திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. உலக வங்கி அறிக்கையின்படி, 1980- 2016 காலகட்டத்தில் நாட்டின் 22,33,000 ஏக்கர் நிலப்பரப்பானது காடல்லாத திட்டங்களுக்கானவையாக மாற்றப்பட்டுள்ளது. நாட்டின் வனப்பகுதியில் இது 1.2 சதவீதம் ஆகும். வனச்சட்டத்தின்படி இந்தப் பரப்பளவுக்கு இணையாக மாற்றுக் காடுகள் வளர்க்கப்படவேண்டும். இப்படியான காடுகள் வளர்க்கப்படுவது குறித்து காடுகள் கணக்கெடுப்பு நிறுவனம் அக்கறை கொண்டதா என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை.
மாற்றுக் காடுகள் வளர்ப்புக்கான நிதியைக் கொண்டுசேர்ப்பதற்காக 2009இல் தேசியளவில் மாற்றுக் காடுகள் வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் (காம்பா) அமைக்கப்பட்டது. ஆனாலும் இந்த நிதியானது மற்ற திட்டங்களுக்கே பயன்படுத்தப்படுகிறது. முதன்மைத் தலைமைக் கணக்காயர் தொடர்ச்சியாக இதில் கவனம் கொண்டு வலியுறுத்தியதை அடுத்து, காம்பா நிதிக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டு, 2016இல் மாநிலங்களவையும் இதற்கான சட்டமும் இயற்றப்பட்டது. கடந்த ஆண்டில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, காம்பா நிதியில் மாநிலங்களுக்கு வழங்கப்படாமல் இதுவரை திரண்டிருக்கக்கூடிய ரூ.54 ஆயிரம் கோடி தொகையை மத்திய அரசு செலுத்தவேண்டும் என உத்தரவிட்டது. அதையடுத்தே, கடந்த ஆகஸ்ட்டில் 27 மாநிலங்களுக்கான ரூ.47 ஆயிரம் கோடியை ஒதுக்க மத்திய அமைச்சர் ஜவடேகர் உத்தரவிட்டார்.
பசுமை மற்றும் காடுகள் வளர்ப்பை நோக்கிய செயல்பாட்டில் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உள்பட்ட பல மாநிலங்களில் சிறப்பு செயல் திட்டங்களைத் தொடங்குவது எனும் உறுதிப்பாடு இப்போது வந்துள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் தெலுங்கானா மாநிலமானது, ஹரிதகாரம் எனும் பெயரில், காடுகள் மற்றும் சமூகக் காடுகள் திட்டங்களின் மூலம் 23 கோடி மரங்களை வளர்க்கவும் பாதுகாக்கவும் இலக்குவைத்துள்ளது. ஒவ்வொரு இரு ஊர்களுக்கும் ஒன்றாக சராசரியாக ஒரு செடி, மரக்கன்றுப் பண்ணை அமைக்கப்படவுள்ளது. நிழல்தரக்கூடியவை, பழங்கள், மலர்கள், மருத்துவப் பயன்பாடுள்ளவை என பல்வேறு வகையான தாவரங்களை வளர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச அரசோ, வனம் - மணம் எனும் பெயரில் தாவர உற்பத்தி மற்றும் காடுகள் வளர்ப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. 2029ஆம் ஆண்டுக்குள் மொத்தத்தில் பாதி நிலப்பரப்பை காடுகளாக மாற்றுவது எனும் அதிகபட்சமான இலக்கை நிர்ணயித்துள்ளது. ஆனால், வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களோ ஆண்டுக்கணக்கில் நிரப்பப்படாமல் இருக்கின்றன.
நிலையான காட்டுத்தீ நேர்வுகளால் நிலத்தின் உற்பத்தித் திறன் குறைக்கப்படுவதுடன் அதன் வண்டல் தன்மையும் குறைந்துகொண்டே வருகிறது. இப்படியான பேரிடர்களைத் தடுப்பதற்கு, காடுகளில் ஆங்காங்கே அகழிகள் வெட்டப்படவேண்டும். வன ஆக்கிரமிப்பும் செடி, கொடி வளர்ப்பது அருகிவருவதும் தடுக்கப்படவேண்டும். சில தாவரங்களைப் பாதுகாப்பது, வளர்ப்பதில் ஈடுபடும் மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் கூடுதலாக மதிப்பெண்களை வழங்கவேண்டும்.செடிகளை நட்டுவளர்ப்பதில் அவற்றை புவிக்குறியீடு செய்வது இன்றியமையாதது ஆகும். தனியார் நிலங்களில் வருவாயை ஈட்டக்கூடிய செடிகொடிகள் வளர்ப்பு மூலம் காடுகளை வளர்ப்பதற்கு நில உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவேண்டும்.
காட்டுத்தீ மூலம் கற்ற பாடம்:
பல மாதங்களாக ஆஸ்திரேலியாவில் கடுமையாகவும் நிறுத்தமுடியாதபடியும் காட்டுத்தீயின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பசுமைப் பரப்பை அதிகாரித்து உரிய நேரத்தில் வெப்பநிலையைக் கட்டுக்குள் கொண்டுவராவிட்டால் என்னமாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை அவை உணர்த்துகின்றன. பெரும் காட்டுத்தீயானது பொது வாழ்க்கைக்கு மட்டுமல்ல வனவுயிர்களை அழிப்பதற்குக் காரணமாகவும் சவாலாகவும் இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, சராசரி வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துவிட்டது. அதிபட்ச வெப்பநிலையானது சில ஆண்டுகளாக பஞ்சத்தையும் அதிகரித்துவருகிறது.
கங்காரு நாடான ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் தொடங்கிய தீயால் சமன்படுத்த இயலாத அளவுக்கு பாதிப்புகள் உள்ளாகியுள்ளது. குயின்ஸ்லாந்து, நியு சவுத்வேல்ஸ் ஆகய இடங்களில் மிக பெரிய அழிவு ஏற்பட்டுள்ளது. மெல்போர்ன், சிட்னி உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கும் விரைவாகப் பரவும் வெப்ப அலைகள் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தின. இப்போதுவரை ஒரு கோடி ஏக்கர் பரப்புள்ள காடுகள் எர்க்கப்பட்டுள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தது 24 பேர் இந்தத் தீயினால் உயிரை இழந்துள்ளனர்.
நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் 1,300 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. கடற்படை, விமானப்படையின் 3 ஆயிரம் படைவீரர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக இன்னும் பணியாற்றிவருகின்றனர். 48 பில்லியனுக்கும் மேற்பட்ட பறவைகளும் விலங்குகளும் இந்தத் தீயினால் உயிரிழந்திருக்கக்கூடும் என சுற்றுச்சூழலியலாளர்கள் வேதனைப்படுகின்றனர். தோன்றியுள்ள புதிய நிலைமையால் கோலா கரடிகளில் 30 சதவீதம் அழிந்துபோகும் அரியவகையினமாக மாறியுள்ளன என்று சிட்னி பல்கலைக்கழக சூழலியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கரடி பொம்மையைப் போலத் தோற்றமளிக்கும் இந்தக் கோலாக்கள் துருவக் கரடிகளைப் போன்று மெதுவாக நகரும் என்பதால் காட்டுத்தீயிலிருந்து இவைகள் சிக்கி உயிரிழந்தன. கங்காரு, சிறு கங்காரு வகை மற்றும் பல பறவையினங்களும் நெருப்புக்கு இரையாகின. காயங்களுடன் தப்பிய விலங்குகள் இருப்பிடம், உணவு இன்றி இறக்கக்கூடும். நூற்றுக்கணக்கான பறவைகள் காடுகளுக்கு அருகிலுள்ள வீடுகளில் அடைக்கலமாகியுள்ளன.
இயற்கையின் மீதான மறுபடியும் சரிசெய்யப்படாத கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தியதே இப்படியான தாக்கங்களுக்கான காரணம் என்பது நன்கு அறியப்பட்ட உண்மை. இப்படியான பேரிடர்களிலிருந்து அனைத்து நாடுகளும் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளவேண்டிய நேரம் இது; அப்படி செய்யாவிட்டால் பூமித்தாய் தன்னைக் காத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை நமக்கு கற்பிக்க இன்னும் கடுமையான வழிகளை நாடுவாள்!