ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்களை அமைக்க அம்மாநில முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் உள்ளதுபோல் நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம், அரசியல் தலைநகராக அமராவதி, நீதித் துறை தலைநகராக குர்நூல் ஆகியவற்றை உருவாக்க ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மூன்று தலைநகரங்கள் அமைப்பது குறித்து ஆலோசனைகளை பெற ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
மூன்று தலைநகரங்கள் அமைப்பதற்கு அந்தக் குழு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், இந்தத் திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கருத்து வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர், "42 ஆண்டுகால அரசியல் அனுபவத்துடன் நான் இதைச் சொல்கிறேன். இதனை அரசியல் ரீதியாகவோ சர்ச்சைக்குரிய விதமாகவோ பார்க்க வேண்டாம். நான் அமைச்சராக இருந்தபோது மாநிலம் பிரிக்கப்பட்டது. அப்பொது, மாநிலத்தின் பல மாவட்டங்களில் நிறுவனங்கள் அமைக்கப்பட்டது. வளர்ச்சியை அப்படிதான் பரவலாக்க வேண்டும். ஆனால், நிர்வாக செயல்பாடுகள் அனைத்தும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து. நிர்வாகம் செய்வதற்கு அதுவே எளிமையாக இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: கழுத்துவரை மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்