ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியலமைப்பு சட்டம் 370இன் கீழ் பல சிறப்பு தகுதிகள் வழங்கப்பட்டுவந்தன. இதனை மத்திய அரசு சட்ட திருத்த மசோதா கொண்டுவந்து நீக்கியது. இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் ஃபருக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட 2,000 அரசியல் தலைவர்களை மத்திய அரசு சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி வீட்டு சிறையில் அடைத்தது.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆன நிலையில், வீட்டு சிறையில் இருந்த தேவேந்திர ரானா, ராமன் பல்லா, ஹர்சதேவ் சிங் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை மத்திய அரசு இன்று விடுவித்துள்ளது. ஆனால், மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் ஃபருக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் விடுவிக்கப்படவில்லை.
முன்னதாக, மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், “எந்த அரசியல் தலைவர்களும் 18 மாதங்களுக்கு மேல் வீட்டு சிறையில் இருக்கமாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், அவர்கள் வீட்டு சிறையில் இல்லை, அரசின் விருந்தினர்களாக ஐந்து நட்சத்திர விடுதிகளில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஹாலிவுட் பட சிடிக்கள் தரப்பட்டுள்ளன” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.