மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் பாஜகவும் சிவசேனாவும் முடிவுநிலையை எட்டியதையடுத்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல் முறையாக தனது வாரிசை நேரடியாக தேர்தலில் களமிறக்கத் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, தற்போது சிவசேனா கட்சியின் இளைஞரணி தலைவராக உள்ள ஆதித்யா தாக்கரேவை தெற்கு மும்பையிலுள்ள ஓர்லி தெகுதியின் வேட்பாளராக சிவசேனா அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியிலிருந்த சச்சின் அஹர் சிவசேனாவில் இணைந்ததாலும், ஓர்லி தொகுதியின் எம்எல்ஏ சுனில் ஷிண்டே சிவசேனாவின் ஆதரவாளர் என்பதாலும், அப்பகுதி மக்களுக்கு சிவசேனா மீது உள்ள நற்பெயரின் காரணமாகவும் உத்தவ் தாக்கரே அந்தத் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன.
இதுவரை தேர்தல் களத்தில் மக்களை சந்திக்காமலேயே அரசியலில் உச்சம் பெற்ற தாக்கரே குடும்பத்தினர், ஆதித்யா தாக்கரேவை முதலமைச்சர் வேட்பாளராக முன்நிறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும், நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றிபெற்றால் ஆதித்யா தாக்கரே நேரடியாக துணை முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகின்றன.
பாஜகவுடனான கூட்டணி இறுதி செய்யப்படாத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் விருப்பப்படி, சிவசேனாவைச் சேர்ந்த ஒருவர்தான் மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக வரவேண்டும் என்ற சூசகமான தகவலை உத்தவ் தாக்கரே மக்கள் மத்தியில் விட்டுச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.