உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் கோவிந்த் நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலர் ஒருவர், கரோனா தொற்றைக் குணப்படுத்துவதாக கூறிய காணொலி ஒன்று, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அந்த காணொலியில் அவர், கரோனா நோயைக் குணப்படுத்த ஒரு வாய்ப்புத் தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் கடவுள் கிருஷ்ணனின் அருளால் இதை நான் செய்வேன் என்றும், அவரால் தான் நான் இயக்கப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
அதேசமயம் கரோனா தொற்று பாதித்த ஒவ்வொருவரையும் நான் காப்பாற்றுவேன் என்றும்; இல்லையென்றால் நீங்கள் தரும் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் காவலர் கூறினார்.
இதுபோன்று முன்னதாக, லக்னோவில் கொடிய நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறிய போலி சாமியார் ஒருவரைக் காவல் துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.