மத்தியப் பிரதேசத்தில் இளம் அரசியல் தலைவர்களில் ஒருவர் ஜோதிராதித்ய சிந்தியா. காங்கிரஸ் கட்சியில் இருந்த சிந்தியா, கருத்து வேறுபாடு காரணமாக தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். இதனால் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கரோனா காலத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்றதால், சிறிது காலம் சுகாதாரத் துறை அமைச்சர்கூட இல்லாமல் அம்மாநில அரசு இயங்கியது.
மத்தியப் பிரதேசத்தில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துவரும் இந்தச் சூழலில், ஜோதிராதித்ய சிந்தியா கரோனா அறிகுறிகள் காரணமாக டெல்லியிலுள்ள மேக்ஸ் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிந்தியாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவச் சோதனை ஒன்றில் கரோனா இருப்பதாகவும், மற்றொரு சோதனையில் கரோனா இல்லை என்பது போலவும் முடிவுகள் வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, கடந்த மாதம் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ராவுக்கு, கரோனா தொற்றின் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கை சின்னத்தை விமர்சிப்பதை விடுத்து எல்லையை கவனியுங்கள் - ராகுல் காந்தி மறைமுகத் தாக்கு