ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது சட்டப்பிரிவு 2019 ஆண்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கப்பட்டது. அத்துடன் மாநிலம் பிரிக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் பகுதி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவையில்லா யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது.
இதற்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, அம்மாநிலத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டனர். முக்கியமாக முன்னாள் முதலமைச்சர்கள் மெஹ்பூபா முப்தி, ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அதன் பின்னர் உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா ஆகிய இருவரும் சில மாதங்களுக்கு முன்னதாக, வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் மற்ற பிரமுகர்களை விடுவிக்கக்கோரி அக்கட்சியின் தலைவர் ஃபருக் அப்துல்லா, துணைத் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோர் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள 16 பேரை சிறையில் அடைக்கவில்லை என கூடுதல் தலைமை வழக்கறிஞர் பஷீர் அகமது தார் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் அரசு சார்பாக ஆஜரான அவர், "மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள 16 பேர் மீதும் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவர்களை விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்திருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "காலிஸ்தான் கொடியை செங்கோட்டையில் ஏற்றினால் சன்மானம் வழங்கப்படும்"