70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பல அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறுகின்றனர் எனக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் அமித் ஷா தேர்தல் பரப்புரையில் ஈடுபட தடை கோரி ஆம் ஆத்மி கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில் “கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசாங்கம், கல்வி முறையில் பல புரட்சிகளை செய்துள்ளது. இது உலகறிந்த உண்மை. ஆனால், அமித் ஷாவும் அவரது கட்சி அமைச்சர்களும் டெல்லி அரசு பள்ளிகள் என தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதனால் இதுபோன்று உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைதளங்களிலிருந்து நீக்க வேண்டும். அதுமட்டுமின்றி அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு 48 மணி நேரம் பரப்புரை மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க...ஜாமியா பல்கலைக்கழக வன்முறை: 70 பேரின் புகைப்படங்கள் வெளியீடு