அஸ்ஸாம் மாநிலம் சீராங் மாவட்டத்திலுள்ள கிராமம் உதல்குரி. மருத்துவ, சாலை வசதிகளற்ற இந்த கிராமத்தில் சாதாரண காய்ச்சலுக்கே ஐந்து கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு சென்று மருத்துவ சிகிச்சை பெறும் சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி அவசர கால மருத்துவ சேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதியும் கிடையாது.
இந்நிலையில், இந்த கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று பிரசவ வலியால் துடித்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வாகனங்களும் இல்லாததால், டோலி கட்டும் முறையில், அப்பகுதி மக்களே சில பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே ஸ்ட்ரெக்சர் போன்ற உபகரணத்தை செய்துள்ளனர்.
இதனை, கயிற்றுக்கட்டில், போர்வை, பிளாஸ்டிக் தார்பாய், மரக்கட்டை கொண்டு உருவாக்கியுள்ளனர். அந்த பெண்ணை கட்டிலில் படுக்கவைத்து, போர்வையால் மூடியுள்ளனர். பின்னர், மரக்கட்டை உதவியுடன் இருவர் அந்த பெண்ணை பிடித்த நிலையில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.
நீண்ட நேரம் பிரசவ வலியால் துடித்த அப்பெண்ணிற்கு செல்லும் வழியிலே குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து, பிறந்த குழந்தையும், அப்பெண்ணும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றனர். இச்சம்பவத்தையடுத்து, அப்பகுதி மக்கள் தங்களுக்கு முறையான மருத்துவ வசதிகள் செய்துதரக்கோரி முறையிட்டுள்ளனர்.