கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. உணவகங்களும் முற்றிலும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக உணவகங்களின் உணவை மட்டுமே நம்பிருந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது ஒருபுறம் எனில் ஊரடங்கு உத்தரவால் தெரு நாய்கள், பூனைகள் உள்ளிட்ட விலங்குகளும் உணவுகள் கிடைக்காமல் அல்லாடுகின்றன. இருப்பினும் பல தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து தங்களால் முடிந்த உதவியை செய்துவருகின்றனர்.
அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் ரேகா மோகன், தினமும் 1200 தெரு நாய்களுக்கு உணவளித்துவருகிறார். இதற்காக அவர் தினமும் 75 கிலோ அரிசி உணவும், 60 கிலோ கோழிக்கறியும் தயார்செய்கிறார்.
இது குறித்து ரேகா கூறுகையில், “தெரு நாய்களுக்கு உணவளிக்க தினமும் ஐந்தாயிரம் ரூபாய்வரை செலவாகிறது. 15-க்கும் மேற்பட்ட மக்களும் தானாக முன்வந்து நாய்களுக்குத் தேவையான உணவுகளை என்னிடம் ஒப்படைக்கின்றனர். ஊரடங்கு காலம் முடியும்வரை என்னால் முடிந்த இந்தச் சேவையை தொடர்ந்து செய்வேன்” என்றார்.
17 நாய்கள், 12 பூனைகள் என இதுவரை 29 வீட்டு விலங்குகளை ரேகா வளர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஏழைகளின் பசியைப் போக்கும் தூய்மைப் பணியாளரின் குடும்பம்