கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு தரப்பினரும் வேலையிழந்து அத்தியாவசிய தேவைகளுக்கே அவதியுற்றுவருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் கான்ஸா கிராமத்தில் வசித்துவரும் இஸ்மியாத் என்பவரது குடும்பத்தினரை இந்து இளைஞர் ரிஷி என்பவர் தத்தெடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய இஸ்மியாத், “எங்கள் குடும்பத்தில் இரண்டு மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். ஊரடங்கு உத்தரவினால் ஒருவேளை உணவிற்கே நாங்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானோம். எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் முன்பு பிச்சை எடுத்தாவது குடும்பத்தினரைக் காப்பாற்றலாம் என எண்ணியிருந்தேன். ஆனால், ஊரடங்கு உத்தரவின் காரணமாக பள்ளிவாசலுக்கு மக்கள் வரவும் தடை விதிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
மேலும், இதையறிந்த தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ரிஷி என்ற இளைஞர், தன்னையும் தங்களது குடும்பத்தினரையும் தத்தெடுத்துள்ளதாகவும், தங்களுக்கு தேவையான உணவுப் பொருள்களை வழங்கிவருவதாகவும் கூறிய அவர், வீட்டின் முன்பு உள்ள கடையில் தங்களுக்கு தேவையான அனைத்துப் பொருள்களையும் வழங்குமாறும் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
இந்த சம்பவம் இந்து இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'அரவயிறு கஞ்சினாலும் நிம்மதியா குடிக்கலாம்; எங்கள ஊருக்கே அனுப்பிடுங்க' - புலம்பெயர் தொழிலாளர்களின் அவலக்குரல்