அரசுத் திட்டங்களில் பெரும் பின்னடைவாகக் காணப்படுவது அதற்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவு தான். ஒவ்வொரு துறையிலும் முடங்கிக்கிடக்கும் நிதிகளைச் சரியாகக் கண்டடைந்து ஒதுக்கப்படும் பட்சத்தில், அனைத்து திட்டங்களும் சரிவர செயல்வடிவம் பெறும். இது குறித்த விவாதம் மத்திய பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் மாநில அரசுகளுக்கும் ஏற்பட்டது.
மத்திய அரசின் திட்டமான போஷான் அபியான் திட்டத்துக்கு மாநில அரசுகள் தங்கள் கையிருப்பில் இருக்கும் நிதி முழுவதையும் சரியாகப் பயன்படுத்தக் கோரி சுற்றறிக்கை அனுப்பியது. பல்வேறு மாநிலங்கள் திட்டங்களை அமல்படுத்துவதில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும், நிலையின் தீவிரத்தன்மையை உணர்ந்து கொண்டு செயல்படவில்லை என அத்துறையின் அமைச்சரான ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தை பெயரளவிலேயே அமல்படுத்தியுள்ளதாகவும், கர்நாடகா, மேற்குவங்கம், ஹரியானா, பஞ்சாப், கேரளா, ஒடிசா, கோவா போன்ற மாநிலங்கள் இத்திடத்தில் மிகவும் பின்தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதுவரை ஒதுக்கியுள்ள நிதியான 3 ஆயிரத்து 769 கோடி ரூபாயில் 33 விழுக்காடான, ஆயிரத்து 58 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான தொகையே பயன்படுத்தியுள்ள நிலையில், ஹரியானா, கேரளா போன்ற மாநிலங்கள் 10 விழுக்காட்டுக்கும் குறைவான தொகையையே பயன்படுத்தியுள்ளது.
மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்துவரும் மம்தா பானர்ஜியின் மேற்கு வங்க மாநில அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலமான கோவாவிலும் இதை நிலைமை தான். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு போதுமான அலுவலர்கள் இல்லாததைக் காரணம் காட்டி, இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் ஒதுக்கிவைத்துள்ளது கோவா அரசு. மேற்கண்ட மாநிலங்களை ஒப்பிடும்போது பஞ்சாப் மாநிலத்தின் செயல்பாடு ஓரளவு பரவாயில்லை எனலாம்.
சர்வதேச சுகாதார அமைப்பான லான்செட் நடத்திய ஆய்வின்படி போஷான் திட்டம் இந்தியாவில் சரிவர நடைமுறைப்படுத்தாத பட்சத்தில், பெரும் பாதிப்பை எதிர்காலத் தலைமுறையினர் மத்தியில் உருவாக்கும் என எச்சரித்துள்ளது. வளர்ச்சி குறைபாடு, உடல் எடைக்குறைவு, சேய் மற்றும் தாய்க்கு ஏற்படும் அனிமியா குறைபாடு போன்றவை, இந்தியாவின் எதிர் காலச் சிக்கல்களாக இருக்கும் என சர்வதேச நிறுவனத்துடன் இந்திய சுகாதார ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.
மேற்கண்ட குறைபாடுகளைக் களைய பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து போஷான் திட்டம் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2022ஆம் ஆண்டுக்குள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை நீக்க வேண்டும் என அங்கன்வாடி மையங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் வடிவம் கொடுக்கப்பட்டது. வளர்ச்சி குறைபாடுகளை அனைத்து மாநிலங்களும் ஓராண்டுக்குள், இரண்டு விழுக்காட்டிற்கும் கீழ் குறைக்க வேண்டும் என நிதி ஆயோக் அமைப்பு இலக்கு நிர்ணயித்தது.
இதைப் பின் தொடரும் விதமாக 27 மாதிரி மாவட்டங்களைத் தேர்வு செய்து, அங்குள்ள அங்கன்வாடி மையங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில்தான் அதிர்ச்சிக்குரிய முடிவுகள் கண்டறியப்பட்டன. அங்குள்ள கர்ப்பிணி பெண்களில் 46 விழுக்காடு பேருக்கு மட்டுமே ஊட்டச்சத்து உணவு கிடைத்துள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டுள்ள இந்தத் திட்டத்தை அமல்படுத்த, பல்வேறு மாவட்டங்களில் தொழில் நுட்ப வசதிகள் சென்றடையவில்லை. இதை அறிந்த மத்திய அரசு வரும் 2021ஆம் ஆண்டுக்குள் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என நிர்ணயித்துள்ளது.
இதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பு அவசியம் என்ற போதிலும் மேற்கு வங்கம், பஞ்சாப், ஒடிசா போன்ற மாநிலங்கள் இத்திட்டத்திற்கான ஸ்மார்ட் ஃபோன்களை வாங்கக் கூட முயற்சி காட்ட முன்வரவில்லை. மற்ற மாநிலங்களும் இதை சரியான முனைப்புடன் செயல்படுத்துவதில்லை. சுமார் 25 லட்சம் போலி பயனாளர்கள் இத்திட்டத்தின் கீழ் உள்ளனர் என்ற விவரமும் வெளியாகியுள்ளது.
25 விழுக்காடு அளவிற்கான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், இதைப் போக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது நிதி ஆயோக். இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டிய தருணமிது. மக்களுக்குச் சரியான ஊட்டச்சத்தை அளிக்கும் பட்சத்தில், எதிர்கால தலைமுறையினரை ஊட்டச்சத்துக் குறைபாடு எனும் பிரச்னையில் சிக்கவிடாமல் வலிமையான நாட்டை உருவாக்க முடியும்.
இதையும் படிங்க: இந்தியாவிடம் சிக்கித் தவிக்கும் வங்கதேசம்!