கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரசால் வயது முதிர்ந்தோர் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் அதிகமான அச்சம் ஏற்படுள்ளது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 85 வயது மூதாட்டி, கரோனா வைரஸ் சிகிச்சையிலிருந்து மீண்டுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாக தரப்பில் பேசுகையில், ''ஒடிசாவின் ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 85 வயது மூதாட்டி. அவர் 22 கிலோ எடையில் பலவீனமாக 12 நாள்களுக்கு முன், மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர், மருத்துவர்கள் ஆகியோரின் தீவிர சிகிச்சையால் நேற்று அவர் வீடு திரும்பியுள்ளார். அவருடன் சேர்ந்து மூன்று வயது குழந்தை உள்பட 14 பேர் கரோனா வைரஸ் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் அனைவரும் கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் கரோனா வைரசால் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் உயிரிழந்தனர். கரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், ஒடிசாவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு அம்மாநிலத்தின் மருத்துவமனைகள் சிறப்பாக பங்காற்றி வருகின்றன. முக்கியமாக மாநில அரசுடன் இணைந்து கரோனா சிறப்பு மருத்துவமனையாக அறியப்படும் சம்ஸ் மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் வீடு திரும்பியிள்ளனர்.
எங்கள் மருத்துவமனையில் 525 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவில் 25 படுக்கைகள் இருக்கின்றன. மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். ஒவ்வொரு குழுவிலும் 82 மருத்துவர்களும், 264 செவிலியர்களும் இருப்பர். 14 நாள்கள் மருத்துவமனையில் பணி முடிந்த பின், மற்றொரு குழுவினர் அவர்களுக்கு பதிலாக மருத்துவமனை பணிகளில் ஈடுபடுவார்கள். மருத்துவமனை வளாகத்தில் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒருமுறை கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது'' எனத் தெரிவித்தனர்.
வயது முதிர்ந்தவர்கள் அதிகமாக பாதிக்கப்படும் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து 85 வயது மூதாட்டி மீண்டுள்ள சம்பவம் பல்வேறு மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'மீதமுள்ள 16.4 லட்சம் கோடி எங்கே?' - ப.சி. கேள்வி! சிதம்பர ரகசியத்தை இன்று உடைக்குமா அரசு?