உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில், நேபாளத்திலும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. அங்கு இன்று 279 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 364ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் எல்லையிலுள்ள தெற்கு நேபாளத்தில்தான் கரோனா பாதிப்புகள் அதிகளவில் உள்ளது எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்துப் பேசிய நேபாள நாட்டின் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி, "இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு மக்கள் வரத்தொடங்கியுள்ளனர். இதனால்தான் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகமாகியுள்ளது. நேபாளம் திரும்பியவர்களில் 85 விழுக்காடு மக்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவிலிருந்து 7,400 நேபாளர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
ஆனால், மே-ஜூன் மாதங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்தனர். சராசரியாக ஒவ்வொரு நாளும் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேர் இந்தியாவிலிருந்து திரும்பி வருகிறார்கள். பலர் இந்தியாவிலிருந்து நெரிசலான ரயில்களிலும் பேருந்துகளிலும் திரும்பிவருவதால், அவர்களுக்கு எளிதாக கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.
கரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை நாட்டில் மிகக் குறைவாகும். நேபாள மக்களின் உணவுப் பழக்கத்தினால் நோய் எதிர்ப்புச் சக்தி வலுவாக உள்ளது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நல்ல சிகிச்சையும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மொத்தம் 53 ஆயிரம் பெண் சுகாதார ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.