வெங்காயத்தின் விலை விண்ணைப் பிளக்கும் அளவு உயர்ந்துள்ள நிலையில், திருவிழாக் காலம் வருவதால் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே, ஏழாயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தீபாவளிக்கு முன்பு மேலும் 25 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "விலையைக் குறைக்கும்விதமாக பூடான் நாட்டிலிருந்து 30 ஆயிரம் டன் உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட உள்ளது. கடந்த மூன்று நாள்களாக, வெங்காயத்தின் விலை நிலையாக விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காயம் கிலோ 65 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது.
ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெங்காயத்தின் இறக்குமதிக்காக வழிமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்து, ஆப்கானிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து தனியார் வர்த்தகர்களால் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. வெங்காய விதை ஏற்றுமதி செய்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது" என்றார்.