ஒடிசா மாநிலத்திலுள்ள பெர்ஹாம்பூர் மாவட்ட தொழிலாளர் அலுவலர், மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் உறுப்பினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (டி.சி.பி.ஓ), பெர்ஹாம்பூர் குழந்தைகள் இடர் உதவி அலுவலர், காவல் துறையினர் ஆகியோர் அடங்கிய பணிக்குழு பைத்யநாத்பூர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பல உணவு விடுதிளிலும் துரித உணவகங்களிலும் சோதனைகளை நடத்தினர். அப்போது சட்டத்திற்குப் புறம்பாக குழந்தைத் தொழிலாளர்கள் அங்கே பணிகளில் அமர்த்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பெர்ஹாம்பூர் மாவட்ட தொழிலாளர் அலுவலர் பாபுலால் பத்ரா கூறுகையில், ”இந்தத் திடீர் சோதனையின்போது ஐந்து உணவகங்களிலிருந்து குழந்தைகள் மீட்கப்பட்டனர். குழந்தைகளின் வயது குறித்து நாங்கள் விசாரித்தபோது, அவர்களுக்கு 14 வயதுக்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் அந்த உணவகங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்துள்ளோம். அடுத்த சில நாள்களில் நகரின் பல்வேறு பகுதிகளில் சோதனைகளை மேற்கொள்ள இருக்கிறோம்” என்றார்.
மீட்கப்பட்ட ஏழு குழந்தைத் தொழிலாளர்களில், ஐந்து குழந்தைகள் ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் மீதமுள்ள இருவர் கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அலுவலர்கள் தெரிவித்தனர். குழந்தைகள் பணிபுரியும் நிறுவனங்களில் அடிக்கடி சோதனைகளை நடத்த கஞ்சம் மாவட்ட ஆட்சியர் விஜய் அம்ருதா குலங்கே பணிக்குழுவிடம் கேட்டதை அடுத்து, 'குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கை மாதம்' என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாக குழந்தைத் தொழிலாளர்களை மீட்பதற்காக இந்த மாத இறுதி வரை சோதனைகள் தொடரும் என்று தெரிகிறது. முன்னதாக, பிப்ரவரி 9ஆம் தேதி இங்குள்ள ஜுகுடியில் உள்ள ஒரு செங்கல் சூளையிலிருந்து இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
இதையும் படிங்க: 'வெறுப்பு அரசியல் வேலை செய்யாது'- உ.பி.யில் காலூன்றும் ஆம் ஆத்மி!