கடந்த பத்தாண்டுகளில் கேரளாவில், மனித - விலங்கு மோதல்களில் 64 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக கேரள அரசு வனத்துறையின் இணையதளம் தெரிவிக்கிறது. இது இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைவான எண்ணிக்கை என வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
மேலும், மின்சாரத் தாக்குதல், சாலை விபத்து, வெடிமருந்து வெடித்தது உள்ளிட்ட காரணங்கள் 64 காட்டுயானைகளின் உயிரிழப்புக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015-2016ஆம் ஆண்டில் அதிக காட்டுயானைகள் இறந்துள்ளன. மலயாத்தூர் வனச்சரகத்தில் மட்டும் அந்த காலகட்டத்தில் 14 காட்டு யானைகள் கொல்லப்பட்டுள்ளன.
கடந்த பத்தாண்டுகளில் கேரளாவில் இயற்கையாக உயிரிழந்த காட்டுயானைகளின் எண்ணிக்கை 772 ஆகும். கேரள வனத்துறையின் கணக்கெடுப்பின்படி கேரளாவில் 5,706 காட்டுயானைகள் தற்போது உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில், கர்ப்பிணி யானை பன்றிகளுக்கு வைத்திருந்த அன்னாசிப் பழத்தைச் சாப்பிட்டதால் உயிரிழந்ததாகவும், யானைக்கு வேண்டுமென்றே தீங்கு விளைவிக்க வேண்டும் என்று நோக்கில் அச்சம்பவம் நிகழவில்லை என்றும் கேரள வனத்துறை விளக்கமளித்துள்ளது.
துன்பியல் நிகழ்வாக யானை உயிரிழந்ததையடுத்து வனத்துறை எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுரேந்திர குமார் தெரிவித்தார்.
மேலும், வனத்துறை அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனவும் சுரேந்திர குமார் கேட்டுக்கொண்டார்.