டெல்லி: இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக உள்ளது. அதுமட்டுமின்றி, கரோனா வைரஸ் தொற்றிற்கு எதிராக உலக நாடுகளுடன் இணைந்து பங்களிப்பை வழங்கிவருகிறது. இதற்கிடையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பூசி முயற்சிகளில் பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டிவருகின்றன.
முன்னதாக கடந்த நவம்பர் 6ஆம் தேதி ஹைதராபாத்திலுள்ள பாரத் பயோடெக், பயோலொஜிகல்-ஈ லிமிடெட் நிறுவனங்கள் கரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசிகளைத் தயாரித்துவருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம், பிற நாடுகளின் வெளிநாட்டுத் தூதர்களிடம் தெரிவித்தது.
இதன்காரணமாக, ஹைதராபாத்தை தளமாகக் கொண்டு கரோனா வைரஸிற்கு எதிராக தடுப்பூசிகளை உருவாக்கிவரும் முன்னணி பயோடெக் நிறுவனங்களான பாரத் பயோடெக், பயோலொஜிகல்-ஈ லிமிடெட் நிறுவனங்களைப் பார்வையிட 64 வெளிநாட்டுத் தூதர்கள் இன்று ஹைதராபாத் சென்றுள்ளனர்.
பாரத் பயோடெக் நிறுவனம் டிச. 07ஆம் தேதி உள்நாட்டில் உருவாக்கிய கரோனா தடுப்பூசியான 'கோவாக்சினை' அவசரகாலப் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்குமாறு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கு விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவிட்-19 தடுப்பூசி நிறுவனங்களை பார்வையிட வரும் வெளிநாட்டு தூதர்கள்!