லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சிறுமி ஒருவர் சில நாள்களுக்கு முன் பிரிட்டனிலிருந்து திரும்பியுள்ளார்.
இவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தில், பிரிட்டனிலிருந்து திரும்பியவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். மேலும், வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகள் அனைவரும் முழு உடல் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதைத் தொடர்ந்து, ஐரோப்பய நாடுகளிலிருந்து உத்தரப் பிரதேசம் திரும்பிய 1,655 பயணிகளின் விவரங்களை இந்திய அரசு சமர்பித்துள்ளது. இவர்களை கண்டறிந்து கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டு தனிமைப்படுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்களில் இதுவரை 1090 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 565 பயணிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அவர்களை கண்டறிவது கடினமாக உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் இன்று பிரிட்டனிலிருந்து திரும்பிய 10 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
டிசம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு தலைநகர் லக்னோவுக்கு வந்த 138 இங்கிலாந்து குடிமக்களில் 117 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 114 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேரின் சோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
21 பயணிகளை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், அரசாங்கம் அவர்களின் தொலைபேசி எண்களைக் கொண்டு அவர்களை தொடர்புகொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கண்டுபிடிக்கப்பட்டவர்களில் 10 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது மாதிரிகள் குறித்து ஆய்வு செய்ய, உமிழ்நீர் மாதிரிகள் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இந்தியாவில் உருமாறிய கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு