இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் தொழிற்சங்க தலைவர் மோதிலால் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, புதுச்சேரியில் உணவுப் பொருள்கள், மருத்துவ அவசரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் உற்பத்தி தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வார காலமாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தன்னிச்சையாக அத்தியாவசிய பொருள்களை உற்பத்தி செய்யாத ஆலைகள் இயங்குவதற்கு அனுமதி அளித்து வருகிறார்.
ஆலைக்கு வரும் தொழிலாளர்கள் வாகனத்தில் நெருக்கமாக, குவியலாக வந்து இறங்குகின்றனர். அதேபோன்று ஆலைக்குள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பணியில் ஈடுபடுகின்றனர். தொழிலாளர்கள் கூட்டமாக பணிக்கு வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியர் தன்னிச்சையாக தொழிலாளர் துறை ஆணையரை கலந்து ஆலோசிக்காமல் அனுமதி வழங்கியிருப்பது சமூக இடைவெளியை கேள்விக்குறியாக்கியுள்ளது.
அதபோன்று, புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணி பாதுகாப்புக் கோரி தினக்கூலி ஊழியர்கள் பணியை புறக்கணித்து இரண்டு தினங்களுக்கு முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதற்கு தீர்வு கிடைக்காததால் உயிருக்கு ஆபத்து எனக் கூறி 54 பேரும் பணிக்கு வரவில்லை. இந்த நிலையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் மருத்துவப் பணிகள் பாதிக் கப்படுவதாக சுட்டிக்காட்டி மாவட்ட ஆட்சியர் 54 பேரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: மக்கள் அலட்சியம் காட்டினால்... சட்டம் தன் கடமையைச் செய்யும் - முதலமைச்சர் எச்சரிக்கை!