கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவப் பணியாளர்களின் பங்கு முக்கியமானதாகும். குறிப்பாக, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை முறையாக கண்காணித்துக்கொள்வதில், செவிலியர் முதன்மையானவர்களாக உள்ளனர்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த செவிலியர் வேலையை உதறிவிட்டு, அவரவர் சொந்த மாநிலங்களுக்குப் படையெடுக்கின்றனர்.
கடந்த சில நாள்களில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட செவிலியர் வேலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இவர்கள் அனைவரும் மணிப்பூர், திரிபுரா, ஒடிசா, ஜார்க்கண்ட் போன்ற பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்கள் ஆவர்.
நாளுக்கு நாள் அதிகப்படியான செவிலியர் வேலையிலிருந்து விலகுவதால், செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டு, நிலைமையைச் சமாளிக்க முடியாமல் தனியார் மருத்துவமனைகள் நர்சிங் கவுன்சிலுக்கும், தலைமைச் செயலருக்கும் கடிதம் எழுதியுள்ளன.
செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் மருத்துவமனைகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.
மேற்கு வங்கத்தில் இதுவரை இரண்டாயிரத்து 677 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 959 பேர் குணமடைந்துள்ளனர். 238 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:'வீட்டை காலி செய்!' - செவிலிக்கு மிரட்டல்