மறைந்த பிரதமர் இந்திரா காந்தி 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நள்ளிரவில் நாடு தழுவிய அவசர நிலையை (எமர்ஜென்சி) கொண்டுவந்தார். 21 மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடி நிலையை, மாநிலங்களுக்கு இடையே அப்போதைய குடியரசுத் தலைவர் ஃபக்ரூதீன் அலி அஹமது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 352 (1)ன் கீழ், 'உள்நாட்டு குழப்பம்' என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்து பிரகடனப்படுத்தினார்.
ஈடிவி பாரத்தின், இந்தக் கட்டுரையில் அவசரக் கால நிகழ்வுகளை பார்க்கலாம்.
அவசர நிலைக்கு வழிவகுத்தது என்ன?
நாட்டின் அவசர நிலைக்கு பல காரணிகளும், சம்பவங்களும் காரணிகளாக திகழ்ந்தன. நாடு முழுக்க அரசுக்கு எதிரான கலவரங்கள், கிளர்ச்சிகள் நடைபெற்றன. இதுமட்டுமின்றி நாட்டில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட பொருளாதார சிக்கல்கள் மிகுந்து காணப்பட்டது.
- நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முன்னதாக 1970களில் நடந்த முக்கிய காரணிகள்:
நவநிர்மாண் அந்தோலன் போராட்டம்
குஜராத்தில் 1970களில் அமைந்த காங்கிரஸ் அரசாங்கம் கல்விக் கட்டணங்களை உயர்த்தியது. இந்தக் கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுத்தனர். அதன்பின்னர் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதனால் அரசுக்கு எதிரான போராட்டம் மக்கள் மத்தியில் காட்டுத் தீ போல பரவியது. ஆங்காங்கே புரட்சிகள், புதிய புதிய போராட்டங்கள் வெடித்தன. காங்கிரஸ் தலைமையிலான, ஊழல் அரசாங்கத்தை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கைக்கு முதலில் செவிசாய்க்க மறுத்த மத்திய அரசாங்கம், இறுதியாக 1974ஆம் ஆண்டு பிப்ரவரியில் மாநில அரசை கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது.
இந்தப் போராட்டம், 'நவநிர்மாண் இயக்கம்' என்று அறியப்படுகிறது.
ஜேபி இயக்கம்
1974ஆம் ஆண்டு மார்ச் மாதம், பிகார் அரசுக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் வெடித்தது. அப்போது, மாணவர்களுக்கு அரசியல் ஆதரவை காந்திய சமூகவாதி ஜெய்பிரகாஷ் நாராயணன் வழங்கினார். இதனால், “ஜேபி இயக்கம்” என்றும் “பிகார் இயக்கம்” என்றும் பின்னாள்களில் இந்தப் போராட்டம் பெயர் பெற்றது.
ஜெய்பிரகாஷ் நாராயணன், மொத்தப் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார். இதில் மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என பலரும் பங்கெடுத்தனர். அவர்கள் மாநில அரசை கலைக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.
மேலும் இந்தப் போராட்டம், “நாடாளுமன்றத்துக்கு (நாட்டுக்கு) எதிரானது” என இந்திரா காந்தி கூறினார். இதைத்தொடர்ந்து இது, காந்திக்கு எதிரான போராட்டமாக திரும்பியது.
ரயில்வே கிளர்ச்சி
1974ஆம் ஆண்டு மே மாதம், சோசலிச தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் ரயில்வே வேலைநிறுத்தம் ஒன்று நிகழ்ந்தது. இதன் விளைவாக நாடு முழுவதும் பொருள்கள் மற்றும் பொது இயக்கம் சீர்குலைந்தது. மூன்று வாரங்களுக்கு நீடித்த இந்த வேலைநிறுத்தத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான ரயில்வே ஊழியர்கள் பங்கேற்றனர். (காந்திக்கு பிறகு இந்தியா என்ற நூலில் பிரபல வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா பல்வேறு ஆதாரங்களை தொகுத்து இதனை பதிவுசெய்துள்ளார்.)
இந்தக் கிளர்ச்சி அடுத்தடுத்த நாள்களில், ஆயிரக்கணக்கான கைதுகள், சித்ரவதைகள், மரணங்கள், ஊழியர்கள் வேலை பறிப்பு என அரசால் நசுக்கப்பட்டது.
அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
1971ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலில் இந்திரா காந்தி ரேபரேலி (இன்றுவரை காங்கிரஸின் கோட்டை) தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜ் நரேன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், இந்திராவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் 1975ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி தீர்ப்பு கூறிய நீதிபதி ஜக் மோகன் லால் சின்ஹா, இந்திரா காந்தியின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார்.
மேலும், இந்திரா தேர்தலில் போட்டியிட ஆறு ஆண்டுகள் தடை விதித்தார். இந்நிலையில், “தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 20 நாள்கள் வரை கால அவகாசம் வேண்டும், அதுவரை தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என இந்திரா தரப்பு நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டது. அதை ஏற்று நீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியது.
இந்த நிலையில், ஜூன் 24, 1975ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்த்து இந்திரா காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் இடைக்கால தடை விதித்தார்.
வாசகர்கள் கவனிக்க: இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே சொடுக்கவும்.
அதன்படி இந்திரா காந்தி நாடாளுமன்றத்துக்குள் பிரதமராக நுழைய அனுமதி அளித்தார். ஆனால் அவரது மேல்முறையீட்டில் நீதிமன்றம் தீர்ப்பளிக்காவில்லை என்பதை சுட்டிக்காட்டி அவர் வாக்களிக்க தடை விதித்தார்.
மறுதினம் (ஜூன்25-1975) மாலை டெல்லி ராம்லீலா மைதானத்தில் தலைவர்கள் ஜெய்பிரகாஷ் நாராயணன் (ஜேபி), மொராஜி தேசாய், ராஜ் நரேன், நானாஜி தேஷ்முக், மதன் லால் குரானா மற்றும் இதர தலைவர்கள் கூடினார்கள்.
அந்த மைதானம் மக்கள் வெள்ளத்தில் நிறைந்து காணப்பட்டது. அங்கு உரையாற்றிய தலைவர்கள் இந்திரா காந்தி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் இந்திரா பிரதமர் பதவியில் உறுதியாக இருந்தார்.
அந்தக் கூட்டத்தில், ஜெய்பிரகாஷ் நாராயணன் தனது கோபக்கனல் பேச்சுக்கிடையே புகழ்பெற்ற கவிஞர் ராம்தாரி சிங்கின், திங்கர் பாடலின் வரிகளை நினைவுகூர்ந்தார். அந்த வரிகள், “சிங்காசன் காலி கரோ, ஜனதா ஆத்தி ஹே”.
இதன் அர்த்தம், “மக்கள் வருகிறார்கள், உங்கள் சிம்மாசனத்தை சரணடையுங்கள்” என்பதே ஆகும். மேலும், ராணுவத்தினரும், காவலர்களும் இனி அரசின் உத்தரவுக்கு கீழ்ப்படிய வேண்டாம். அது சட்ட விரோதமானது, அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் முழங்கப்பட்டது.
இந்த முன்னேற்றங்கள் உள்நாட்டு அவசர நிலையை தூண்டின. இதையடுத்து உள்நாட்டு அவசர நிலை பிரகடனத்துக்கான முன்மொழிவில், குடியரசுத் தலைவர் அவசர அவசரமாக நள்ளிரவே கையெழுத்திட்டார்.
முன்னதாக இந்திரா காந்தி குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், “நாட்டின் பாதுகாப்புக்கு உடனடியாக அச்சுறுத்தல் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது” என கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து சுதந்திர இந்தியாவில் மூன்றாவது முறையாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ஆம்.. அதற்கு முன்னர், 1962 இந்தியா- சீனா போர் மற்றும் வங்கதேசம் உருவான 1971ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரின் போதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
அவசர நிலை காலம்
ஜெய்பிரகாஷ் நாராயணன், மொராஜி தேசாய், ஜார்ஜ் பெர்ணான்டஸ், அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி, அருண் ஜெட்லி என ஏராளமான எதிர்க்கட்சி தலைவர்கள் இரவோடு இரவாக வீடு புகுந்து கைதுசெய்யப்பட்டனர். இதுபோன்ற கைதுகள் நாடு முழுக்க நடந்தது.
அவசர நிலை காலத்தில், மிகவும் விமர்சிக்கப்பட்ட அம்சம் நாட்டின் பத்திரிகைகளுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை. இதன் மூலம் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் முற்றிலுமாக நசுக்கப்பட்டது.
அன்றைய தினம் இரவு (ஜூன்25-1975) பல பத்திரிகை அலுவலகங்களின் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.
நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை இந்திரா காந்தி அரசு வகுத்தது. அதன்படி எதையும் வெளியிடுவதற்கு முன்பு பத்திரிகை ஆலோசகரிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.
இந்த கடினச் சூழலிலும் பல செய்தித்தாள்கள் ராம் நாத் கோயங்காவுக்குச் சொந்தமான இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுடன் இணைந்து, வெற்று பக்கங்களை வெளியிட்டன. சில செய்தித்தாள்கள் சில வாரங்களுக்குப் பிறகு இந்திராவுக்கு அழுத்தம் கொடுத்தாலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்ந்து விதிவிலக்காக இருந்தது.
நெருக்கடி காலங்களில் பல மனித உரிமை மீறல்கள் பதிவாகியுள்ளன. அதில் முக்கியமானது பிரதமரின் மகன் சஞ்சய் காந்தி தலைமையில் வெகுஜன மக்கள் மீது நடத்தப்பட்ட கட்டாய கருத்தடை.
அவசர நிலையைத் தொடர்ந்து நடந்தது என்ன?
1977ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி அவசர நிலை பிரகடனம் ரத்து செய்யப்பட்டது. இந்திரா காந்தி எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையிலிருந்து விடுவித்தார். உடனடியாக தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பத்திரிகை சுதந்திரம் மீட்கப்பட்டன.
காங்கிரஸின் முதுபெரும் தலைவராக விளங்கிய மொராஜி தேசாய், 21 மாத நெருக்கடிக்கு பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி ஜனதா ஆட்சிக்கு வழிவகுத்தார். காங்கிரஸ் அல்லாத முதல் அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது.
இதைத்தொடர்ந்து ஜனதா அரசாங்கம் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு 44ஆவது சட்டப்பிரிவில் திருத்தம் கொண்டுவந்து, “உள்நாட்டு குழப்பம்” என்பதை ஆயுதக் கிளர்ச்சி என மாற்றியது. இதன்மூலம் அரசின், “சர்வ அதிகாரம்” ரத்தானது. அன்றிலிருந்து இன்று வரை இந்தச் சட்டத்தில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.
இதையும் படிங்க: சீனப் பிரச்னை: தொலைநோக்குடனும் விவேகத்துடனும் முன்னேற வேண்டிய நேரம் இது!