உலக தங்க கவுன்சில் (WGC) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாட்டில் தங்க நகைகளின் சில்லறை விற்பனைக்கான தேவைகள் அதிகளவு உள்ளன. இந்தப் பெருந்தொற்றின் காலத்தில் 37 விழுக்காடு இந்தியப் பெண்கள், தற்போதுவரை தங்கம் சார்ந்த பொருள்களை வாங்க முன்வரவில்லை. ஆனால், இவர்கள் வருங்காலங்களில் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
இந்தியாவில் 60 விழுக்காடு பெண்கள் தங்களுக்குத் தேவையான தங்க நகைகளை வைத்துள்ளனர். புதிய வடிவமைப்பு, தங்கள் வாழ்க்கைச் சூழலுக்குத் தகுந்ததுபோல் வடிவங்களை மாற்றியமைக்கவும்; அவர்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். தாங்கள் உடுத்தும் புடவை உள்ளிட்டப் பிற பொருள்களிலும் தங்கப் பொருள்களை சேர்ப்பது தற்பொழுது அதிகரித்து வருகிறது.
இந்தியப் பெண்களில் 37 விழுக்காட்டினர் தங்கம் கொள்முதல் செய்யும் முனைப்போடு உள்ளனர். பெரும்பாலான தங்க நகைகள் வாங்குபவர்களில் 44 விழுக்காட்டினர், கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்களாகவும், 30 விழுக்காட்டினர் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். நகைக் கடை வைத்திருப்பவர்களுக்கு தங்கள் தொழிலில் சில புதிய யுக்திகளைப் புகுத்தி, மேலும் பல வாடிக்கையாளர்களைக் கவருவதற்கு இது ஒரு நல்ல காலம்.
நகர்ப்புற பெண்கள் தங்கம் வாங்குவது, தங்களது வாழ்க்கைக்கான மூலதனமாகவும், பாதுகாப்பாகவும் கருதுகின்றனர். இது அவர்கள் மீது சமூகம் கொண்டுள்ள எண்ணங்களின் வெளிப்பாடு எனவும் கருதுகின்றனர். கிராமப்புற பெண்கள் தங்க நகைகளை மரியாதை அளிக்கும் ஒரு பொருளாக மதிப்பிடுகின்றனர்.
இந்தியாவில் 18 முதல் 24 வயதுடைய பெண்களில் 33 விழுக்காட்டினர், கடந்த 12 மாதங்களில் பல்வேறு விதமான தங்க நகைப் பொருள்களை வாங்கியுள்ளனர். அவற்றில் எதிர்காலத் தேவையை கருத்தில்கொண்டு செயல்பட்டவர்கள் மிகவும் குறைவானவர்களே' எனத் தெரிவித்துள்ளது.
உலக தங்க கவுன்சிலின் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் கூறுகையில், "இந்திய தங்க நகைச் சந்தை, கைவினையாளர்களின் திறமைகளில் உலக அளவில் முன்னணியில் உள்ளது. அவர்கள் நாட்டின் பெண்களுக்காக பல அலங்காரப் பொருள்களை வெவ்வேறு வடிவங்களில் தங்களது கற்பனைத் திறனைக்கொண்டு வடிவமைக்கின்றனர்.
ஆனால், மாறிவரும் தொழில் நுட்ப காலங்களில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நுகர்வோரின் சுவை நாளுக்கு நாள் மாறிவருவதை இந்த ஆராய்ச்சி நமக்குக்காட்டுகிறது. இளைய தலைமுறையினருக்கு தங்கத்தின் மீதான ஈர்ப்பு நாளடைவில் குறைவதற்கான வாய்ப்பும் உருவாகி வருகிறது.
தங்க நகைகள் என்பது பாரம்பரியத் தேவை. நுகர்வோருக்கான தேவையை அறிந்து அவர்களுக்கு ஏற்றவாறு தொழிலை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளுதல் உள்ளிட்டவைகளில் தங்கம் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டுவரும் தொழில்துறையினரும் கவனம் செலுத்த வேண்டும்"என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நிலைதடுமாறும் உலக வர்த்தகம்: ரூ.50 ஆயிரத்தை தொடும் தங்கம்?