இந்தியாவின் வடமாநில எல்லைகளில் பரந்து விரிந்திருக்கும் இமயமலை பகுதிகள் பல்வேறு வகையிலான உயிரினங்களுக்கு இருப்பிடமாக விளங்குகிறது. அரியவகை விலங்குகளும், பறவைகளும், தாவரங்களும் பல்கியிருக்கும் அப்பகுதி இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகப் பாதுகாக்கப்படுகிறது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ரேணுகா சரணாலயம் இந்தியாவின் முக்கியமான பறவைகள் சரணாலயமாகும். இமாச்சல மாநிலத்தில் சிம்மனூர் மாவட்டத்தில் கடலுக்கு 672 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ரேணுகா ஏரியுடன் உள்ள வனப் பகுதியில் இச்சரணாலயம் அமைந்துள்ளது.
தற்போது இச்சரணாலயத்தில் சீதோஷன சூழ்நிலை சிறப்பாக உள்ளதால் வெளிநாடுகளில் இருந்து பறவைகள் இங்கு வரத் தொடங்கியுள்ளன. கடந்த ஒரு மாத காலத்துக்குள் 350க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் வந்துள்ளதாக அச்சரணாலயத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பருவகாலம் முடிய இன்னும் 4 மாதத்துக்கு மேல் இருப்பதால் பல நாடுகளிலிருந்து மேலும் அரிய வகைப் பறவைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இப்பகுதியின் சுற்றுலாவும் அதிகரித்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளது வனத்துறை நிர்வாகம். கடந்த 2005 ஆம் ஆண்டு இப்பகுதி ராம்சர் கன்வேன்ஷன் என்ற உலக இயற்கை பாதுகாப்பு இயக்கத்தால் இப்பகுதி சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாக்கப்பட வேண்டிய அரிய வகை இடம் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.