கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களில் பயிலும் மாணவர்கள், பணியாற்றும் தொழிலாளர்கள் சிக்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதன்படி, உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாகராஜ் பகுதியில் உயர்கல்வி , வேலைகளுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வசித்து வருகின்றனர்.
திடீரென்று அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் சிக்கித்தவித்த மாணவர்கள், தங்களின் சொந்த ஊர் செல்வதற்கு உதவி செய்யுங்கள் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், அனைத்து மாணவர்களையும் 300 பேருந்துகளில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், " நாங்கள் வைத்திருந்த அத்தியாவசிய பொருள்கள் இருந்தவரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், நாள்கள் செல்லச் செல்ல பொருள்களில் பற்றாக்குறை ஏற்பட்டபோது, வீட்டிற்கு திரும்பிச் செல்ல யோசிக்க ஆரம்பித்தோம்.
சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களின் ஊதியத்தை குறைக்க அவசர சட்டம்