ஆந்திர முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் தொடர்ந்து செய்துவருகிறார்.
அதன் ஒரு பகுதியாக அம்மாநிலத்தில் ரூ.22,000 கோடி மதிப்பிலான வீடுகள் 30 லட்சம் ஏழைப் பெண்களின் பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும், ஏழைப் பெண்களுக்கு விரைவில் வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கு மாநில அரசு போராடி உச்ச நீதிமன்றத்தின் மூலம் சாதகமான தீர்ப்பைப் பெறும் என ஜெகன்மோகன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி காணொலி வாயிலாக வீடுகளின் கட்டுமான தளங்களை ஆய்வுசெய்தார். அப்போது, வீடுகளின் மேற்கூரைகளைப் பார்த்து அவை சரியாகப் பொருத்தப்படவில்லை என்றும், அதனால் வீடுகள் சேதாரமடைய வாய்ப்புள்ளது என்றும் கூறி அலுவலர்களை எச்சரித்தார்.
இதனைத் தொடர்ந்து மண்டல வருவாய் அலுவலர்களுடன் அடுக்குமாடிக் கட்டடங்களின் விவரங்கள், புகைப்படங்கள், வீடுகளுக்கான பட்டா பதிவு உள்ளிட்டவை குறித்தும் ஆய்வுநடத்தினார்.
இதைத் தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், “பெண்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அமுல், எச்.யூ.எல்., புரொக்டர், கேம்பிள், ரிலையன்ஸ், ஜியோ, அலானா ஆகிய நிறுவனங்களுடன் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
19 லட்சம் பெண்கள் தங்கள் வாழ்வாதார விருப்பங்களுக்கு ஏற்றவாறு பணத்தைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்த முடிவுசெய்துள்ளனர். எட்டு அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று 15 நாள்களுக்கு ஒருமுறையும், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வங்கி ஊழியர்கள், எஸ்.இ.ஆர்.பி. அலுவலர்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகள் வாரத்திற்கு ஒருமுறையும் இது குறித்து ஆய்வு நடத்துவார்கள்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வாரத்திற்கு ரூ.10 கோடி செலவிடப்படுகிறது.
மாநிலம் முழுவதும் கிராம செயலக கட்டடங்களின் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடைந்துவிடும். மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை பலப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்திவருகிறது.
மேலும், பள்ளிகள் 10 விதமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. நாடு-நேடு திட்டத்தின்கீழ் 55 ஆயிரம் அங்கன்வாடி மையங்களைப் புதுப்பிக்க அடுத்த வாரம் ஒரு செயல் திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.
மேலும், நாடு-நேடு திட்டத்தின் மூலம் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் பள்ளிகளில் அனைத்துப் பணிகளும் நிறைவடைவதை உறுதிசெய்யுமாறு மாவட்ட ஆட்சியர்கள், இணை ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.