காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை நீக்கிய பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கராவாதிகளின் ஊடுருவல் நடவடிக்கை அதிகரிக்கத் தொடங்கின. இதையடுத்து எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற மூன்று பயங்கரவாதிகளை ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று என்கவுன்ட்டர் செய்தனர்.
இது குறித்து பாதுகாப்புப் படையினர் தரப்பில், “நௌஷெரா பகுதியில் மே மாதம் 28ஆம் தேதி முதலாகவே ஊடுருவலுக்கு எதிரான பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இப்பகுதியில் நுழைய முயன்ற மூன்று பயங்கரவாதிகளுக்குத் தீவிரமாகப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவப் போவதாக உளவுத் துறை தகவல்கள் அளித்தன்பேரில் ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.
மூத்த ராணுவ அலுவலர், “காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு அதிகமாகவுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள 15 ஏவுதளங்களிலிருந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவக் காத்திருக்கின்றனர்.
இந்தக் கோடை காலத்தில் இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் அதிக அளவில் ஊடுருவுவார்கள் எனத் தெரிகிறது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்திவருகின்றனர். பயங்கரவாதிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க இந்திய பாதுகாப்புப் படை தயாராகயிருக்கிறது” என்றார்.
இதையும் படிங்க: பொது முடக்கத்தின் மத்தியில் ராஜஸ்தானில் அதிகரித்த குடும்ப வன்முறை!