மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று முழு அடைப்பு நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு நாடு முழுவதும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழ்நாட்டில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்கின.
இந்நிலையில் பாஜகவிற்கு எதிராகக் காங்கிரஸ் கடும் விமர்சனங்களை வைத்துவருகிறது. இதற்குப் பதிலடி தரும்விதமாக பேசிய சத்தீஸ்கர் மாநில பாஜக பொறுப்பாளர் புரண்டேஸ்வரி, "இடைத்தரகர்களைத் தவிர்த்து விவசாயிகளுக்கு உதவும் வகையில் புதிய சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் சொல்வதுபோல் விவசாயி உற்பத்தி சந்தைக் குழுவை முடிவுக்குக் கொண்டுவருவது அல்ல. ஆனால் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களோ முன்னதாகவே விவசாயி உற்பத்திச் சந்தைக் குழுவை முடிவுக்குக் கொண்டுவர ஆலோசித்திருந்தனர். இந்தப் புதிய சட்டமானது வேளாண் பொருள்களை யாருக்கு வேண்டுமானாலும் நல்ல விலையில் விற்க வழிவகைச் செய்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஒரு வருடத்தில் 234 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எனவே விவசாயிகளின் பாதுகாவலர்கள் எனச் சொல்லிக்கொள்ளவதற்கு பூபேஷ் பாகலுக்கோ காங்கிரஸ் கட்சிக்கோ உரிமை இல்லை" எனத் தெரிவித்தார்.
மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த வேளாண் சட்டங்கள், மின்சார திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், அச்சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.