குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த சுருதி தாகூர் (23) என்பவர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுக் கடந்த மாதம் சர்தார் வல்லபாய் படேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 17 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, கடந்த 6ஆம் தேதி சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பினார்.
இதையடுத்து, மற்ற நோயாளிக்கு உதவும் நோக்கில் பிளாஸ்மா தானம் செய்ய சுருதி முன்வந்துள்ளார். சுருதியின் கோரிக்கையை வல்லபாய் படேல் மருத்துவமனையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, இன்று அவரிடமிருந்து பிளாஸ்மா எடுக்கப்பட்டது.
இதுகுறித்து ஈ டிவி பாரத்திடம் பேசிய சுருதி, "எனக்கு வலியே தெரியவில்லை. என்னைப் போன்று குணமடைந்த மற்றவர்களும் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வரவேண்டும்" என்றார்.
இவர் ரத்தத்திலிருந்து பிரித்து எடுக்கப்படும் பிளாஸ்மா மற்ற கோவிட்-19 நோயாளிகளின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்.
இதுகுறித்து தலைமை சுகாதாரத்துறைச் செயலர் ஜெயந்தி ரவி கூறுகையில், "வைரஸை எதிர்கொள்ள மனித உடல் ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றது. நோயாளி முழுமையாகக் குணமாகும் போது, அவர் உடலில் இந்த ஆன்டிபாடிகள் உருவாகின்றன.
குணமடைந்தவர்களின் உடலிலிருந்து பிளாஸ்மாவை நோயாளிகளின் உடலில் செலுத்தும்போது, அந்த பிளாஸ்மாக்கள் ஆன்டிபாடிகளை உருவாக்கும். அவர்களுக்கு எதிர்ப்புச் சக்தி கூடும்" என்றார்.
இதையும் படிங்க : தெலங்கானாவில் உள்ள 5000 ரோகிங்கிய அகதிகள் கண்காணிப்பு!