நிர்பயா பாலியல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் நால்வருக்கும் மனம், உடல் ஆரோக்கியம் குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி சி. ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அப்போது, இந்த வழக்கில் மனித உரிமை மீறல் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை (என்.எச்.ஆர்.சி.) அணுகுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் மனுதாரரிடம் கேட்டுக் கொண்டது. மேலும் இந்த மனுவை முதலில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் நகர்த்தியிருக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், மனு தொடர்பாக உத்தரவிட முடியாது என்றனர்.
2012ஆம் ஆண்டு நிர்பயா, கூட்டு பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங் (32), பவன் குப்தா (25), வினய் குமார் சர்மா (26) , அக்ஷய் குமார் சிங் (31) ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் நேற்று (மார்ச் 3) காலை 6 மணிக்கு தூக்கிலிடப்பட இருந்தனர். இந்நிலையில் சட்ட தீர்வுகளைத் தீர்ப்பதில் தாமதம் ஏற்பட்டதால், அவர்களின் மரண உத்தரவுகளை நிறைவேற்றுவது மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
ஏற்கனவே ஜனவரி 22, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் மரண தண்டனை தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'சி.ஏ.ஏ.வுக்கு எதிராகப் போராட பெண்களைப் கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை!'