ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் டிராலின் சைமோ பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பிரிவினைவாதிகளுக்கும் இடையே இன்று காலை கடும் மோதல் ஏற்பட்டது.
இது குறித்து காஷ்மீர் மண்டல ஜஜி விஜய குமார் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “பிரிவினைவாதிகள் இருக்கும் இடம் குறித்து தகவலறிந்த பாதுகாப்புப் படையினர் அங்கு அவர்களை சுற்றிவளைத்தனர். அப்போது மறைந்திருந்த பிரிவினைவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு வீரர்களும் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்” என்றார்.
தாக்குதலில் மூன்று பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
கொல்லப்பட்ட பிரிவினைவாதிகளை அடையாளம் காணும் பணியில் காவல் துறை ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அப்பகுதியில் இணைய சேவை முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புல்வாமா கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார்? காவல் துறை விளக்கம்