நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக தலைநகர் டெல்லியில், கரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இதுகுறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், "கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, கரோனா சோதனைகளை மூன்று மடங்கு அதிகரித்துள்ளோம். முன்பு, தினந்தோறும் 5 ஆயிரம் கரோனா சோதனைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அதனை 18 ஆயிரம் சோதனைகளாக அதிகரித்துள்ளோம். மக்களும் சோதனை செய்வதில் அச்சப்பட வில்லை. தற்போது, 15 நிமிடங்களுக்குள் பாதிப்பை கண்டறியும் ஆன்டிஜென் கிட் சோதனையை முயற்சிக்கிறோம்.
இதுமட்டுமின்றி, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது தெரியவந்தது. எனவே, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் ஆக்ஸிஜன் மீட்டரை வழங்க முடிவு செய்துள்ளோம். வீட்டில் யாராவது மூச்சுத் திணறல் மற்றும் ஆக்ஸிஜன் தேவைப்பட்டால், வீட்டிலேயே ஆக்ஸிஜன் உதவியைப் பெற ஒரு தொலைபேசி எண்ணை வழங்கியிருக்கோம்" எனத் தெரிவித்தார்.